மழைக்கால நோய்களை சமாளிப்பது எப்படி?

பருவநிலை மாறும்போது, அதுவரை உறக்க நிலையில் இருக்கிற பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் விழித்தெழுந்து, வீரியம் பெற்று மக்களைத் தாக்கத் தயாராகின்றன. மக்கள் மழையில் நனைகிறபோது இந்தக் கிருமிகள் பரவுவதற்கு மிகவும் ஏதுவான சூழல் உருவாகிறது. அப்போது ஊட்டச்சத்து குறைந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால்தான் மழைக்காலத்தில் நோயால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

வைரஸ் காய்ச்சல்

மழைக்காலத்தில் பரவுகிற காய்ச்சல்களில் முதன்மையானது, ஃபுளு காய்ச்சல். இது ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இந்தக் கிருமிகள் நோயாளி தும்மும்போது, இருமும்போது, மூக்கைச் சிந்தும்போது சளியோடு வெளியேறி, அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கை கால் வலி. தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல், தொண்டை வலி போன்றவை இதன் அறிகுறிகள்.

இந்தக் காய்ச்சலுக்கு எந்த ஒரு சிறப்புச் சிகிச்சையும் இல்லை. காய்ச்சலை குறைக்க பாரசிட்டமால்’ மாத்திரை உதவும். தும்மல், மூக்கு ஒழுகுதல் போன்ற தொல்லைகளைக் கட்டுப்படுத்த ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகள்’ பலனளிக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், ஒரு வாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும். அடுத்தவர்களுக்கு இது பரவாமலிருக்கச் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வந்தால் வலிப்பும் வந்துவிடலாம். எனவே, உடனடியாகக் காய்ச்சலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் தேவையான அளவுக்கு ஓய்வு எடுக்கச் சொல்ல வேண்டும். திரவ உணவுகளையும், சுத்தமான குடிநீரையும் தரவேண்டியது முக்கியம். காய்ச்சல் அதிகமாக இருந்தால், சாதாரண தண்ணீரில் சுத்தமான துண்டை நனைத்துப் பிழிந்து குழந்தையின் உடல் முழுவதும் விரிக்க வேண்டும்.

இந்தக் காய்ச்சலைத் தடுக்கத் தடுப்பூசி உள்ளது. குழந்தைகள் முதன் முறையாக இதைப் போடும்போது ஒரு மாத இடைவெளியில் இரண்டு ஊசிகள் போட்டுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு வருடத்துக்கு ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும். இதைப் பெரியவர்கள் ஒருமுறை போட்டுக்கொண்டால் போதும்.

நிமோனியா காய்ச்சல்

நியூமோக்காக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ், ஸ்டெபெலோகாக்கஸ், மைக்கோபிளாஸ்மா போன்ற பாக்டீரியா கிருமிகள் நுரையீரலைப் பாதிப்பதால் வரக்கூடியது, நிமோனியா காய்ச்சல். இது பெரும்பாலும் குழந்தைகளையும் முதியவர்களையும்தான் அதிகமாகப் பாதிக்கும். இந்த நோயுள்ள குழந்தைக்குப் பசி இருக்காது. சாப்பிடாது. கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போவது அல்லது நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகளும் தோன்றும்.

இருமும்போது நெஞ்சு வலிக்கும். இதனால், குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாகக் காணப்படும். இந்த நோயைக் கவனிக்கத் தவறினால், இந்தக் கிருமிகள் நுரையீரலையும் கடந்து, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளை உறை போன்றவற்றைப் பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்தும். ரத்தப் பரிசோதனைகள் மற்றும் மார்பு எக்ஸ்-ரே மூலம் இதைக் கண்டறியலாம்.

நிமோனியாவை இரு வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிப்பது நடைமுறை. ஆரம்பநிலை நிமோனியா முதல் வகையைச் சேர்ந்தது. இதற்கு நோயாளி வீட்டில் இருந்தபடியே ஒரு வாரத்துக்கு சிகிச்சை பெற்றால் குணமாகும். தீவிர நிமோனியா இரண்டாம் வகை. இந்த நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து, அவர்களின் சிரை ரத்தக் குழாய்களில் தகுந்த ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் சலைனை செலுத்தியும், மூக்கு வழியாக ஆக்ஸிஜனை செலுத்தியும் சிகிச்சை தரப்படும்.

நிமோனியாவை நெருங்க விடாமல் தடுக்கத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் ஆபத்துகள் வராது.‘பிசிவி 13’ தடுப்பூசி (PCV-13) என்பது ஒரு வகை. பச்சிளம் குழந்தைகள் முதல் 50 வயதைக் கடந்தவர்கள் வரை அனைவரும் இதைப் போட்டுக்கொள்ளலாம். குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதம் முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு ‘முதன்மைத் தடுப்பூசி’ என்று பெயர்.

அதன் பிறகு, 15 மாதங்கள் முடிந்ததும், ஊக்குவிப்பு ஊசியாக ஒரு தவணை போடப்பட வேண்டும். 50 வயதைக் கடந்தவர்கள் ‘பிசிவி 13’ தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக் கொண்டு, ஒரு வருடம் கழித்து ‘பிபிஎஸ்வி 23’ தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக் கொள்ள வேண்டும்.

வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா, பாக்டீரியா மற்றும் ரோட்டா வைரஸ் கிருமிகள் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் நமக்குப் பரவுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா ஏற்படுகின்றன. ஈக்களும் எறும்புகளும் இந்தக் கிருமிகளை நமக்குப் பரப்புகின்றன.

நோயாளியின் உடல் இழந்த நீரிழப்பைச் சரி செய்வதே இதற்குத் தரப்படும் சிகிச்சையின் நோக்கம். எனவே, பாதிக்கப்பட்ட நபருக்கு சுத்தமான குடிநீரை அடிக்கடி குடிக்கத் தர வேண்டும். உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீரையும் தரலாம் அல்லது எலெக்ட்ரால்’ பவுடர்களில் ஒன்றைத் தரலாம். இதில் நோய் கட்டுப்படவில்லை என்றால் அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்து சலைன் ஏற்ற வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படுகிற ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தேங்கிக் கிடக்கும் நீரில் குழந்தைகளை விளையாட விட வேண்டாம்.

சீதபேதி

அமீபா, சிகெல்லா, ஜியார்டியா போன்ற கிருமிகள் நம்மை பாதிக்கும்போது சீதபேதி வரும். தெருக்கள், குளங்கள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் மலம் கழிக்கும்போது மலத்தில் வெளியாகும் இந்தக் கிருமிகளின் முட்டைகள், மழைக்காலத்தில் சாக்கடை நீர் மற்றும் குடிநீரில் கலந்து நம்மைத் தொற்றிவிடும். அப்போது சீதபேதி ஏற்படும். காய்ச்சல், அடிவயிற்றுவலி, வாந்தி, மலத்தில் சீதமும் ரத்தமும் கலந்து போவது போன்றவை இதன் அறிகுறிகள். மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சையைப் பெறவேண்டும்.

மஞ்சள் காமாலை

மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் ஹெபடைடிஸ்-ஏ’ வைரஸ் கிருமிகள் நம்மைத் தாக்கும்போது மஞ்சள்காமாலை வரும். பசியின்மை, காய்ச்சல், குளிர் நடுக்கம், வயிற்றுவலி, வாந்தி,  சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது, கண் மஞ்சள் நிறத்தில் காணப்படுவது போன்றவை இதன் அறிகுறிகள். சுத்தமான குடிநீரைப் பருகுவது, மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகமாக உண்பது, எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகளைத் தவிர்ப்பது ஆகியவை இந்த நோயைக் குணப்படுத்த உதவும். இந்த நோய்க்கான தடுப்பூசியை குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் ஒரு முறை, அடுத்து ஆறு மாதம் கழித்து ஒரு முறை என இரண்டு முறை போட வேண்டும்.

டைபாய்டு காய்ச்சல்

சால்மோனெல்லா டைபை’ (Salmonella typhi) எனும் பாக்டீரியாவால் இது வருகிறது. இந்தக் கிருமிகளும் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம்தான் மற்றவர்களுக்குப் பரவுகின்றன. முதலில் காய்ச்சல், தலைவலி, உடல் வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். பசி குறையும். குமட்டல், வாந்தி, வயிற்று வலியுடன் உடல் சோர்வடையும்.

இதைக் குணப்படுத்த நவீன மருந்துகள் பல உள்ளன. நோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டால் விரைவில் குணமாகும்.

கவனிக்கத் தவறினால், குடலில் ரத்தக்கசிவு, குடலில் துளை விழுதல், பித்தப்பை அழற்சி போன்ற கடுமையான விளைவுகள் உண்டாகும். உணவுச் சுத்தம், குடிநீர் சுத்தம் இந்தக் காய்ச்சலைத் தடுக்க உதவும். இந்த நோய்க்கான தடுப்பூசியை ஒருமுறை போட்டுக்கொண்டால் மூன்று வருடங்களுக்கு டைபாய்டு வராது.

கொசுக்களால் பரவும் நோய்கள்

மழைக்காலத்தில் தெருவில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் பெருகுவதால் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்றவை ஏற்படுகின்றன. விட்டு விட்டு குளிர்காய்ச்சல் வந்தால் அது மலேரியாவாக இருக்கலாம். மூட்டுவலி அதிகமாக இருந்தால் சிக்குன்குனியா. மூட்டுவலியுடன் உடலில் ரத்தக்கசிவும் காணப்பட்டால் அது டெங்கு காய்ச்சலின் அறிகுறி. கொசுக்களை ஒழித்தால்தான் இந்த நோய்களைத் தடுக்க முடியும். அதுவரை வீட்டு ஜன்னல், படுக்கையைச் சுற்றி கொசுவலையைக் கட்டி சமாளிக்க வேண்டியதுதான்.

- டாக்டர் கு.கணேசன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: