பாவங்களை போக்கி பக்தர்களுக்கு நல் அருள்பாலிக்கும் கலியுக கடவுள் ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் சிறப்புகள்

கலியுக தெய்வமாக விளக்கும் சீனிவாச பெருமாள் கலியுகத்தில் பூலோகத்திற்கு வந்தபோது தனக்கு உற்சவம் நடத்த வேண்டும் என விரும்பினார். இதற்காக பிரம்மதேவன்  உற்சவத்தை நடத்த முன் வந்தார். பிரம்மதேவன் முன்னிலையில் முதல் உற்சவம் நடத்தப்பட்டத்தால் பிரம்மோற்சவம் என்ற பெயரில் ஆண்டுதொறும் 9 நாட்களுக்கு நடக்கிறது. மகாவிஷ்ணு பூலோகத்தில் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தோன்றி அவதரித்தார். எனவே புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறும் விதமாக மீன லக்னத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவம் வரும் 13ம்தேதி தொடங்கி தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.

13ம்தேதி மாலை கொடியேற்றப்படுகிறது. இந்த கொடி ஏற்றம் மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த அழைப்பை ஏற்று முக்கோட்டி தேவதைகள் வந்து சுவாமிக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தை காண்பதாக ஐதீகம்.

பெரிய சேஷ வாகனம்

முதல் நாளான 13ம்தேதி இரவு பெரிய சேஷ வாகன உற்சவம். சீனிவாச பெருமாள் குடியிருக்கும் மலையும் அவர் சயனித்து இருப்பதும் சேஷத்தின் (ஆதிசேஷன்) மீது என்பதால் சேஷவாகனத்தில் சுவாமி வீதிஉலா வருவார்.

சின்ன சேஷ வாகனம்

2ம்நாள் காலை சிறிய சேஷ வாகன உற்சவம். சிறிய சேஷ வாகனத்தை வாசுகியாக கருதி சுவாமி  கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலிக்கவுள்ளார்.

அன்ன வாகனம் ( ஹம்ச வாகனம்)

2ம்நாளான இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். அன்னம் பால், தண்ணீரை வேறு செய்வது போல் பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை சுவாமி தனது பக்தர்களுக்கு அருள் புரிவதாக ஐதீகம்.

சிம்ம வாகனம்

3ம்நாள் காலை சிம்ம வாகன உற்வம். விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக, மனிதர்களிடம் உள்ள விலங்குபோன்ற தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் உற்சவம்.

முத்துப்பந்தல்

முத்து எவ்வாறு பரிசுத்தமானதோ அதைபோன்று நம் மனதில் தீய எண்ணங்கள் இன்றி பரிசுத்தமாக இறைவனை அடைய வணங்கினால் முக்தி பெறலாம் என்பதை விளக்கும் வகையில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இரவு முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி தயார்களுடன் வீதி உலா வருகிறார்.

கல்ப விருட்ச வாகனம்

4ம்நாள் கல்ப விருட்ச உற்சவம். கல்ப விருட்சம் உணவு, வஸ்திரம் கோரிக்கைகள் மட்டுமே வழங்கும். ஆனால் பரிபூரண வாழ்கைக்கு என்ன தேவையோ அதை பக்தர்களுக்கு கருணை உள்ளத்துடன் வழங்கும் வகை இந்த உற்சவம் நடக்கிறது.

சர்வ பூபால வாகனம்

உலகத்தில் உள்ள மன்னர்கள் அனைவருக்கும் மன்னர் நானே என்று உணர்த்தும் விதமாக பிரம்மோற்சவத்தின் நான்காவது நாள் இரவு ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். இந்த வாகனத்தில் சுவாமியை தரிசனம் செய்வதால் அகங்காரத்தை ஒழித்து நிரந்தரமான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மோகினி அவத்தாரம் ( நாட்சியார் திருக்கோலம்)

பார்க்கடலில் மந்தார மலையை வாசுகி என்னும் பாம்பை கொண்டு  தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்து எடுத்து அமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து மீட்டு தேவர்களுக்கு மட்டுமே கிடைக்க செய்யும் விதமாக மகா விஷ்ணு பெண் வேடத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் ஐந்தாவது நாள் காலை அருள் பாலிக்கவுள்ளார்.

கருட சேவை

மகா விஷ்ணுவின் வாகனம் கருடன். ஐந்தாவது நாள் இரவு தனது வாகனமான தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் கோயிலில் மூலவர் மீது உள்ள மகர கண்டி, லட்சுமி ஆரம், சகஸ்கர நாம மாலை ஆரம் அணிந்து மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். அன்று திருவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்படும் துளசி மாலை மற்றும் புதிய குடை கருட வாகனத்தில் அலங்கரிக்கப்படும் ஆண்டாள் சூடி கொடுத்த கிளியுடன் கூடிய மாலை மூலவருக்கு அணிவிக்கப்படவுள்ளது.

அனுமந்த வாகனம்

த்ரேதா யுகத்தில் தனக்கு சேவை செய்த பக்தன் அனுமந்தனை வாகனமாக கொண்டு பிரம்மோற்சவத்தின் ஆறாவது நாள் காலை ராமர் அலங்காரத்தில் அனுமந்தரின் பக்தி பாவத்தை பக்தர்களுக்கு உணர்த்தவும், கிருஷ்ணர், ராமர், சீனிவாச பெருமாள் அனைவரும் தானே என்னும் விதமாக இந்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.

கஜ வாகனம்

கஜேந்திர மோட்சத்தில் யானை காப்பாற்றிய விதமாக தன்னை சரணடையும் பக்தர்களை காப்பற்றுவதாக சீனிவாச பெருமாள் பிரம்மோற்சவத்தின் ஆறாவது நாள் தங்க யானை வாகனத்தில்  எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இந்த வாகன சேவையில் சுவாமியை தரிசனம் செய்தால் யானை அளவுள்ள பிரச்சனைகளும் எறும்பாக மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சூரிய பிரபை வாகனம

ஏழு குதிரையின் மீது சூரியனுக்கு ரதசாரதியாக சிவப்பு மாலை அணிந்து ஊர்வலம் வருவது மூலம் சூரிய பகவனின் பிரத்தி ரூபம் தானே என்னும் விதமாக பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாள் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

சந்திரபிரபை வாகனம்

ஏழாவது நாள் இரவு வெள்ளை நிற ஆடை, மாலை அணிந்து சந்திரபிரபை வாகனத்தின் மீது மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். சூரியன் அக்னி வடிவம், சந்திரன் சாந்த வடிவம் என்பதால் இரண்டும் தனது அம்சமே என்னும் விதமாக சூரியன் மற்றும் சந்திர வாகனத்தில் சுவாமி வீதிஉலா வருகின்றார்.

ரத உற்சவம

அலைபாயும் மனதை சிதரவிடாமல் கட்டுப்படுத்தி சரீரம் எனும் ரதத்தை நல் வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்ப சுவாமி தயார்களுடன் பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாள் காலை ரதத்தில் எழுந்தருளி  அருள் பாலிக்கின்றார். சுவாமியின் ரதஉற்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்தால் மறு ஜன்மம் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை

ஹஸ்வ வாகனம் ( குதிரை வாகனம் )

கலியுகத்தில் துஷ்ட சக்திகளை வதம் செய்வதற்காக பாயும் தங்க குதிரை மீது பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள் மலையப்ப சுவாமி கல்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

தீர்த்தவாரி

8 நாட்கள் வாகன சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்த மலைப்ப சுவாமிக்கு ஒன்பதாவது நாள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி செய்யப்படுகிறது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கொடி இறக்கம்

ஒன்பது நாட்கள் சுவாமிக்கு நடைபெற்ற வாகன சேவை காண வந்த தேவதைகளை வழி அனுப்பும் விதமாக சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு கோயிலில் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்ட பிரம்மோற்சவ கொடி இரவு வேத மந்திரங்கள் முழங்க  இறக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: