106 யூனிட் மணல் பதுக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் கைது போளூர் அருகே குடோனில்

போளூர், ஏப்.23: போளூர் அருகே குடோனில் 106 யூனிட் கடத்தல் மணல் பதுக்கி வைத்தது தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர். போளூர் அடுத்த செங்குணம் கூட்ரோடு கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி(52). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். புதிதாக வீடுகளை கட்டி விற்பனை செய்தும் வருகிறார். இவர், தனது வீடு கட்டும் தொழிலுக்காக, செய்யாற்றில் இருந்து மணலை கடத்தி வந்து முருகாபாடி கிராமம் அருகே உள்ள குடோனில் பதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. மணல் கடத்துவதற்காகவே பல்வேறு வாகனங்களை வாங்கி, ஆட்களை நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்டா போலீசார் கோவிந்தசாமியின் குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 106 யூனிட் கடத்தல் மணல் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ெபாக்லைன் உட்பட 5 வாகனங்களை டெல்டா போலீசார் பறிமுதல் செய்தனர். 5 டிரைவர்களை மடக்கி பிடித்து போளூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போளூர் போலீசார் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, தாசில்தார் சாப்ஜான், கடத்தல் மணல் பதுக்கி வைக்கப்பட்ட குடோனுக்கு சீல் வைத்தார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோவிந்தசாமியை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: