முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி, ஆக. 10: ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று வயலூர் முருகன்கோயில், ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் உள்பட முருகன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கோயில்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முருகப் பெருமானுக்கு ஆண்டுதோறும் தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், ஆடிக் கிருத்திகை, ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விரதம் ஆகியவை முக்கியமான விசேஷ நாட்களாகும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு உகந்த நட்சத்திரமாகும். அன்று பக்தர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு சென்று முருக பெருமானை வழிபடுவார்கள். நேற்று ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருச்சி குமாரவயலூர் முருகன் கோயிலில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சுவாமிக்கு இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் முருகனுக்கு சிறப்பு சந்தன அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

திருச்சி ஜங்சன் வழிவிடு முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் முருகன், வள்ளி, தெய்வானை சாமிக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திருவானைக்காவல் கோயிலில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து 4ம் பிரகாரத்தில் உள்ள உள்வீதிகள் வலம் வந்து சாமிக்கு அபிஷேகம் செய்தனர். பலர் அலகு காவடி உள்ளிட்ட பல வகையான காவடிகளை ஏந்திவந்து நேர்த்திகடன் செலுத்தினர். முன்னதாக பாலதண்டாயுதபாணிக்கு நல்லஎண்ணெய், திரவியப்பொடி, தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தன அபிஷேகம் நடந்த பின்னர் பாலதண்டாயுதபாணிக்கு சந்தனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அனைத்து முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டனர்.

The post முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: