மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ‘மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள புதிய கொள்கை முடிவுக்கு எந்தவித தடையும் இல்லை’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13,500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு விரைந்து பணி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கடந்த மாதம் 4ம் தேதி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘தமிழகத்தில் சுமார் 12,524 கிராம பஞ்சாயத்துகளில் மக்கள் நலபணியாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.7500 ஊதியம் வரும் வகையில் வேலை உறுதித் திட்டப் பணி கண்டிப்பாக வழங்கப்படும். இதில் முக்கியமாக பணி நீக்கம் செய்யப்பட்ட அல்லது கடந்த பத்து ஆண்டுகளில் இறந்துபோன மக்கள் நலப்பணியாளர்களின் சட்டப்படியான வாரிசுகளுக்கும் மீண்டும் பணி வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்பான வழக்கை கோடைக்கால அமர்வில் பட்டியலிட்டு அவசர வழக்காக விசாரிக்க கோரி புதிதாக இடைக்கால மனு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கோடைக்கால அமர்வு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மக்கள் நலப்பணியாளரின் ஒரு பிரிவை சார்ந்த விழுப்புரம் தன்ராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஹரிப்பிரியா மற்றும் ரகுநாத சேதுபதி ஆகியோர், ‘‘மக்கள் நலப்பணியாளர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு ரூ.25000 ஊதியம் வழங்க வேண்டும். மேலும் மாத ஊதியம் ரூ.7500 வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட முன்மொழிவை அரசாணையாக பிறப்பிக்க கூடாது’’ என வாதிட்டனர்.    தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மற்றும் வழக்கறிஞர் குமணன் ஆகியோர், ‘‘தமிழக அரசு ஏற்கனவே கொரோனா காலத்தில் சந்தித்த நிதி பிரச்னைகளுக்கு இடையேயும் மக்கள் நலப்பணியாளர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படக்கூடாது என்பதின் அடிப்படையில் ரூ.7500 ஊதியத்தை நிர்ணயித்து அவர்களை மீண்டும் பணியமர்த்த கொள்கை முடிவு எடுத்துள்ளது. எனவே இந்த முடிவுக்கு எந்தவித தடையும் விதிக்கக் கூடாது’’ என்றார். மக்கள் நலப்பணியாளர்களின் மற்றொரு சங்க தலைவர் மதிவாணன் என்பவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘‘தமிழக அரசின் புதிய கொள்கை முடிவின் படி பல மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணியில்  சேர்ந்துள்ளனர். ஆனால் மிகவும் சொற்ப உறுப்பினர்களை கொண்ட ஒரு சில சங்க உறுப்பினர்கள் மட்டுமே அரசின் கொள்கையை ஏற்க மறுப்பு தெரிவிப்பதோடு, பிரிவினையை ஏற்படுத்த முயல்கின்றனர்’’ என தெரிவித்தார்.இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில், சங்க பிரச்னையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். ஒட்டுமொத்தமாக அரசின் கொள்கை முடிவை எதிர்க்க முடியாது. தமிழக அரசின் இந்த புதிய கொள்கை முடிவுக்கு எந்தவித தடையும் விதிக்க முடியாது. அதேவேளையில் அரசின் புதிய கொள்கையில் விருப்பமில்லாதவர்கள் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைக்க அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்படும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்….

The post மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: