பெங்களூருவில் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் விரட்டியடிப்பு

*‘ஆரோக்கிய கர்நாடகா’ திட்டத்தை மதிக்காத தனியார் ஆஸ்பத்திரிகள்பெங்களூரு : ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கும் சுகாதார காப்பீட்டு திட்டங்களுக்கு பெரும்பான்மையான தனியார் மருத்துவமனைகள் முன்னுரிமை கொடுக்காமல் தவிர்ப்பதால், தினமும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பரிதவிக்கும் நிலை உள்ளது.  வறுமையில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் இயங்குகின்றன. மக்களின் வசதிக்காக இந்த மருத்துவமனைகளில் நவீன பரிசோதனை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பிபிஎல் ரேஷன் கார்டு வைத்துள்ள வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கென அனைத்து வகையான சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன. பிபிஎல் கார்டு இல்லாதவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவில் கட்டணம் வசூலித்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகின்றன. ஆனால், மருத்துவமனைகளுக்கு வரும் இத்தகைய நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெங்களூருவில் இயங்கும் அரசு மருத்துவமனைகளான வாணி விலாஸ், விக்டோரியா, பவுரிங், கே.சி. ஜெனரல் மற்றும் ஜெயநகர் அரசு  மருத்துவமனைகளில் நோயாளிகளை டாக்டர்கள் சரிவர சோதனைக்கு உட்படுத்தாமல் மேலோட்டமாக நோய்கள் குறித்து கேட்டறிந்து அதற்கு மருந்து மாத்திரைகள் எழுதி கொடுப்பதாக பெருவாரியான நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.  இது குறித்து நடத்திய ஆய்வில், மேற்கண்ட மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு ஆரம்பகட்ட சிகிச்சைக்கூட அளிக்க டாக்டர்கள் மறுப்பதாவும், உரிய சிகிச்சை தேவையென்றால், வீட்டிற்கு வரவேண்டும் என்றும் அல்லது அவர்கள் சிபாரிசு செய்யும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளும்படியும் கூறுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.  நிமான்ஸ் மருத்துவமனை, இந்திராகாந்தி சிறுவர்கள் மருத்துவமனை, ராஜீவ்காந்தி இதய மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளும்படி டாக்டர்கள் சிபாரிசு செய்கின்றனர். பெங்களூருவில் பல அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், அங்கு வரும் நோயாளிகளை வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு செல்லும்படி டாக்டர்கள் அலைக்கழிப்பதால் நோயாளிகள் பரிதவிக்கும் நிலை உள்ளது. இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் சில நேரங்களில் உயிரிழக்கவும் நேரிடுவதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மருத்துவ காப்பீட்டிற்கு மதிப்புள்ளதா? அனைவருக்கும் சுகாதார வசதி வழங்கும் நோக்கத்தில் மாநில அரசின் கீழ் செயல்பட்டு வந்த பல சுகாதார காப்பீட்டு திட்டங்களை ரத்து செய்துவிட்டு ‘ஆரோக்கிய கர்நாடகா’ என்ற பெயரில் ஒரே சீரான திட்டத்தை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக அரசின் சார்பில் வழங்கிய அடையாள அட்டையை பயன்படுத்தி அரசு மருத்துவமனை மட்டுமில்லாமல் மாநிலத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டது. இதனிடையில் ஒன்றியத்தில் ஆளும் நரேந்திரமோடி தலைமையிலான பாஜ அரசு ஆயுஸ்மான் என்ற பெயரில் புதிய சுகாதார திட்டத்தை அறிமுகம் செய்ததுடன், நாடு முழுவதும் மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தி வரும் சுகாதார காப்பீட்டு திட்டங்களுடன் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தை இணைத்தது. இதன் மூலம் ஒன்றிய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு தரமான சிகிச்சை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஒன்றிய, மாநில அரசு நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு திட்டங்களுக்கு பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இயங்கிவரும் தனியார் மருத்துவமனைகள் முக்கியத்துவம் கொடுக்காமல் தவிர்த்து வருகிறது. குறிப்பாக இதயம், சிறுநீரகம் ஆகிய நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகள் சுகாதார காப்பீட்டு அட்டையுடன் சென்றால்  மாநிலத்தில் பல அரசு மருத்துவமனைகளில் இருந்து ஆயுஸ்மான் உள்பட பல சுகாதார திட்டங்களின் அடையாள அட்டையுடன் வரும் நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் விரட்டும் பரிதாப நிலை தினமும் எம்.எஸ்.ராமையா, ஜெயதேவா, மணிப்பால், நாராயண இருதாலயா உள்ளிட்ட பெரிய மருத்துவமனைகளில் நடக்கிறது. இம்மருத்துவமனை வளாகத்தில் காலை முதல் இரவு வரை பொறுமையாக காத்திருந்து கண்காணித்தால் தினமும் 20 முதல் 50 ஆம்புலன்ஸ்கள், 108 ஆம்புலன்ஸ்களில் வரும் நோயாளிகள் அலைக்கழிப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அதே சமயத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.20 முதல் 1 லட்சம் வரை கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற தயாராக இருக்கும் குடும்பங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்படுவதை காண முடியும். ஏழைகளின் நலனுக்காக ஒன்றிய, மாநில அரசுகள் அறிமுகம் செய்துள்ள சுகாதார காப்பீட்டு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதை அரசாங்கம் சட்டம் இயற்றி செயல்படுத்த வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரணம் என்ன?பெரும்பான்மையான தனியார்  மருத்துவமனைகள் சிகிச்சைக்கு அனுமதிப்பதில்லை. சிகிச்சை கொடுக்க மாட்டோம்  என்று சொல்வதற்கு பதிலாக படுக்கை இல்லை என்ற காரணத்தை கூறி சிகிச்சைக்கு  அனுமதிக்காமல் தட்டிக் கழிக்கிறார்கள். அதே சமயத்தில் பணம் செலுத்தி  சிகிச்சை பெறும் நோயாளிகள் வந்தால் முதலிடம் கொடுக்கிறார்கள். சுகாதார  காப்பீட்டு திட்டங்களில் சிகிச்சை அளித்தால் உடனடியாக கட்டணம்  கிடைப்பதில்லை என்ற காரணத்திற்காக தட்டிக் கழிப்பதாக தெரியவருகிறது….

The post பெங்களூருவில் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: