ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையே ஆளுநர்கள் பாலமாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ஒன்றிய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையே பயன்தரும் பாலமாக ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி இருக்கிறார். டெல்லியில் ஆளுநர்களின் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தலைமை தாங்கினார். பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கார், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் மாநாட்டில் தொடக்க உரையாற்றினார்கள். மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில்,“ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே ஆளுநர்கள் பயனுள்ள பாலமாக திகழ வேண்டும். பிற்படுத்தப்பட்டோரை ஒருங்கிணைக்கும் வகையில் மக்கள் மற்றும் சமூக அமைப்புக்களுடன் ஆளுநர்கள் கலந்துரையாட வேண்டும். ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை வடிவமைப்பதில் மட்டுமல்லாமல் பொது மக்களுக்கான நலத்திட்டங்களையும் ஊக்குவிக்கும் வகையில் செயலாற்ற வேண்டும்” என்றார். முன்னதாக உரையாற்றிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறுகையில்,”ஜனநாயகத்தின் சுமூகமான செயல்பாட்டிற்கு பல்வேறு ஒன்றிய அமைப்புக்கள் அனைத்து மாநிலங்களிலும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவது மிகவும் முக்கியமானதாகும்.

அந்தந்த மாநிலங்களின் அரசியலமைப்பு தலைவர்கள் என்ற முறையில் இந்த ஒருங்கிணைப்பை எவ்வாறு ஊக்குவிக்க முடியும் என்பது பற்றி ஆளுநர்கள் சிந்திக்க வேண்டும். அனைத்து ஆளுநர்களும் மக்கள் சேவை மற்றும் மக்கள் நலனுக்காக தொடர்ந்து பங்களிப்பார்கள். குற்றவியல் நீதி தொடர்பான மூன்று புதிய சட்டங்களை அமல்படுத்தியதன் மூலம் நாட்டில் நீதித்துறையின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் சட்டங்களின் பெயர்களில் இருந்து தெளிவாக தெரிகிறது. தரமான உயர்கல்வியானது ஒரு அருமையான சொத்தாகும். ஏனெனில் அது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சமூக மாற்றம் மற்றும் புதுமை, பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துகிறது.தேசிய கல்வி கொள்கையானது கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு முறையை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்ற வகையில் ஆளுநர்கள் இந்த சீர்திருத்த செயல்முறைக்கு பங்களிக்க வேண்டும். பழங்குடியின பகுதிகளில் உள்ள மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கான வழிகளை ஆளுநர்கள் பரிந்துரைக்க வேண்டும்” என்றார்.

 

The post ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையே ஆளுநர்கள் பாலமாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: