பெய்லி பாலம் கட்டுவதற்கு முக்கிய பங்காற்றிய பெண் மேஜர்: குவியும் பாராட்டு

வயநாட்டில் நிலச்சரிவால் மண்ணில் புதைந்த முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதியில் பேரிடர் மீட்பு படை, ராணுவத்தினர் சவாலான மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சூரல்மலைக்கும், முண்டக்கை பகுதிக்கு செல்லும் வழியில் சாலியாற்றின் மீது அமைக்கப்பட்டு இருந்த பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அங்கு சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. மீட்பு பணி மேற்கொள்ள அங்குள்ள ஜிப் லைனை பயன்படுத்தி செல்ல வேண்டும் அல்லது ஹெலிகாப்டர் மூலம் செல்ல வேண்டிய நிலை உருவானது. இதனால், இந்திய ராணுவம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் ராணுவ தேவைகளுக்காக ஆறுகளின் குறுக்கே எழுப்பும் பெய்லி பாலத்தை இங்கு அமைக்க முடிவு செய்தனர். இதற்கான தளவாடங்களை டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து வாகனங்கள் மற்றும் விமானங்கள் மூலமாகவும் வரவழைத்தனர். கொட்டும் மழையிலும் ஆற்றின் குறுக்கே பாலத்தை கட்டி முடிக்கும் சவாலான பணியை போர்க்கால அடிப்படையில் தொடங்கியது ராணுவம். பெங்களூரில் உள்ள மெட்ராஸ் என்ஜினியரிங் குரூப்பை சேர்ந்த (எம்இஜி) ராணுவ பொறியியல் வல்லுநர்கள் மற்றும் வீரர்கள் என 200 பேர், ஒரே ஒரு பெண் அதிகாரியான மேஜர் சீதா ஷெல்கே தலைமையில் தற்காலிக பாலம் அமைக்கும் சவாலான பணி இரவு, பகலாக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்தனர்.

கிட்டத்தட்ட 90 டன் (90 ஆயிரம் கிலோ) எடையை தாங்கக் கூடிய இந்த பிரமாண்ட பாலத்தை 190 அடி நீளத்தில் 24 டன் (24 ஆயிரம் கிலோ) எடையில் 31 மணி நேரத்திற்கும் மேலாக போராடி அமைத்தனர். இந்த இரும்பு பாலம் மூலம் சூரல்மலை – முண்டகை இடையேயான போக்குவரத்துக்கு மிகவும் உதவியது. இதன் வழியாக ஜேசிபி ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் முண்டகைக்கு சென்று மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடர்பாடுகளை கடந்து இந்த பாலத்தை கட்டி முடித்திருக்கும்‌‌ இந்திய ராணுவத்திற்கு நன்றியும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. அதே சமயம், பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட குழுவிற்கு தலைமை வகித்த ஒரே பெண் அதிகாரியான மேஜர் சீதா ஷெல்கே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். மீட்பு பணிக்காக பெய்லி பாலத்தை வெற்றிகரமாக கட்டி முடித்து மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தியதில் முக்கிய பங்காற்றியதாக பெண் மேஜருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

 

The post பெய்லி பாலம் கட்டுவதற்கு முக்கிய பங்காற்றிய பெண் மேஜர்: குவியும் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: