2013 முதல் 2022ம் ஆண்டு வரை வெப்ப அலையால் 10,617 பேர் பலி: கடந்த 80 ஆண்டை காட்டிலும் இந்தாண்டு வெயில் அதிகம்


புதுடெல்லி: கடந்த 2013 முதல் 2022ம் ஆண்டு வரை வெப்ப அலையால் 10,617 பேர் பலியானதாகவும், கடந்த் 80 ஆண்டு சாதனையை இந்தாண்டு வெயில் முறியடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சமீப காலமாக காலநிலை மாற்றத்தின் காரணமாக அதிக வெப்பம், அதிக குளிர், அதிக மழை, கடும் வறட்சி என்று மாறிமாறி வருகிறது. கடந்த 2013 முதல் 2022ம் ஆண்டுக்கு இடையில், நாடு முழுவதும் வெப்ப அலை காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வழங்கிய தரவின் அடிப்படையில் ஒன்றிய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், ‘கடந்த 2013 முதல் 2022ம் ஆண்டுக்கு இடையிலான 9 ஆண்டுகளில் மொத்தம் 10,617 பேர் வெப்ப அலையால் இறந்துள்ளனர்.

கடுமையான வெப்பத்தால் ஆந்திரா, உத்தரபிரதேசம், தெலங்கானா, பஞ்சாப், பீகார் ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் முறையே 2,203, 1,485, 1,172, 1,030 மற்றும் 938 பேர் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர். மேற்குறிப்பிட்ட காலக்கட்டத்தில் டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 18 பேர் பலியாகி உள்ளனர். அதே கடந்த 2014 முதல் 2024ம் ஆண்டுக்கு இடையில், ஆந்திரப் பிரதேசத்தை விட உத்தரப் பிரதேசத்தில் இரண்டு மடங்கு வெப்ப அலை நீடித்தது. இந்த ஆண்டு வரலாறு காணாத வெப்பம் ஏற்பட்டது. கடந்த 80 ஆண்டுகளை காட்டிலும் இந்தாண்டு வெயில் 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை இருந்தது. பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில தேர்தல் அதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டது.

 

The post 2013 முதல் 2022ம் ஆண்டு வரை வெப்ப அலையால் 10,617 பேர் பலி: கடந்த 80 ஆண்டை காட்டிலும் இந்தாண்டு வெயில் அதிகம் appeared first on Dinakaran.

Related Stories: