பெங்களூருவில் இருந்து அந்தமான் சென்ற 148 பயணிகள் 6 மணி நேரம் அலைக்கழிப்பு: விமானத்திலேயே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

சென்னை: பெங்களூருவிலிருந்து அந்தமானுக்கு தனியார் விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்ட 148 பயணிகள், விமானத்திலேயே மணிக்கணக்கில் அலைக்கழிக்கப்பட்டனர். பிறகு சென்னைக்கு வந்து மாலையில் விமானம் தரையிறங்கியது. பயணிகளை மறுநாள் காலை சென்னையிலிருந்து அந்தமான் செல்லும்படி கூறியதால் விமானத்தைவிட்டு இறங்காமல் போராட்டம் நடத்தினர். இதனால் அன்று இரவு மீண்டும் 148 பயணிகளுடன் விமானம் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுள்ளது.பெங்களூருவிலிருந்து அந்தமான் செல்லும் கோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் காலை 10.40 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும். ஆனால், தாமதமாக காலை 11.30 மணிக்கு 142 பயணிகளுடன் அந்தமான் புறப்பட்டு சென்றது.அந்த விமானம் பகல் 1.30 மணி அளவில் அந்தமான் வான்வழியை நெருங்கிய போது அங்கு மோசமான வானிலை நிலவியது. சூறைக்காற்றும் வீசியது. இதையடுத்து விமானம் அந்தமானில் தரை இறங்க முடியவில்லை. எனவே விமானத்தை திருப்பி அனுப்ப முயற்சித்தனர். ஆனால் விமானம் மூலம் பெங்களூரு சென்றடைவதற்கு போதுமான  எரிபொருள் விமானத்தில் இல்லை. எனவே, சென்னைக்கு திருப்பி அனுப்பினர். அந்த விமானம் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்தில் அமர்ந்திருந்தனர். அந்த விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. அதன்பின்பு விமானம் அந்தமானுக்கு செல்ல முடியவில்லை. அந்தமானில் எப்போதுமே மாலை 4 மணிக்கு மேல் தரைக்காற்று அதிகமாக இருக்கும். எனவே அந்த நேரத்தில் அந்தமான் விமான நிலையத்தில், விமானங்கள் தரை இறங்குவதற்கும், புறப்படுவதற்கும் அனுமதி இல்லை. இதையடுத்து அந்த விமானம் பெங்களூருக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.ஆனால் அந்த விமான நிறுவனம், விமானத்தில் உள்ள 148 பயணிகளையும் சென்னையில் இறங்கும்படி கூறினர். சென்னையில் தங்கியிருந்து திங்கள் காலை சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானத்தில் அந்தமான் செல்லுங்கள் என்று கூறி உள்ளனர். ஆனால் அதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் அந்தமான் செல்வதற்காக தான் பெங்களூருவில் விமானத்தில் ஏறினோம். எங்களை சென்னையில் கொண்டு வந்து இறக்கி விட்டு, சென்னையில் இருந்து மறுநாள் அந்தமான் செல்லும்படி கூறுகிறீர்களே. அறையில் தங்குவது உணவுச் செலவை யார் ஏற்றுக் கொள்வது, எனவே எங்களை அந்தமானுக்கு அழைத்துச் செல்லுங்கள். இல்லை என்றால் நாங்கள் புறப்பட்ட இடமான பெங்களூருவில் கொண்டு இறக்கி விடுங்கள் எனக்கூறி விமானத்தை விட்டு கீழே இறங்க மறுத்துள்ளனர். விமானத்திற்குள்ளேயே இருந்து சில மணிநேரம் போராடினர். அதன் பின்பு வேறு வழியில்லாமல் இரவு 9 மணிக்கு மேல் அந்த 148 பயணிகளுடன் விமானம் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. பெங்களூருவில் இருந்து அந்தமான் செல்ல இருந்த 148 பயணிகள் விமானத்தில் அலைக்கழிக்கப்பட்டதோடு மட்டுமின்றி, சென்னை விமான நிலையத்தில் கொண்டு வந்து பல மணி நேரம் காக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விமானம் குறித்த நேரமான 10.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டு சென்றிருந்தால் அந்தமானில் தரை இறங்கியிருக்கும். விமானம் தாமதமாக புறப்பட்டதால்தான், அங்கு தரை இறங்க முடியவில்லை. அதற்கு காரணம், விமானநிலைய அதிகாரிகளும், விமான நிறுவனமும் தான். அதற்காக எங்களை தண்டிப்பது என்ன நியாயம் என்று பயணிகள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.இந்த சம்பவம் பற்றி சென்னை விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, இதுபற்றிய எந்த தகவலும் எங்களிடம் இல்லை என்று கூறிவிட்டனர்….

The post பெங்களூருவில் இருந்து அந்தமான் சென்ற 148 பயணிகள் 6 மணி நேரம் அலைக்கழிப்பு: விமானத்திலேயே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: