பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு

தர்மபுரி, ஆக.6: தர்மபுரி அருகே திப்பிரெட்டிஅள்ளி கிராமத்தில், குருமன்ஸ் பழங்குடியின மக்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்aகடன் செலுத்தினர். தர்மபுரி வட்டம், திப்பிரெட்டிஅள்ளி கிராமத்தில் குருமன்ஸ் பழங்குடி மக்களின் குல தெய்வமான வீரபத்திரசுவாமி கோயில் விழா மற்றும் காட்டுகோயில் பெரியசாமி, காளியம்மன் கோயில்களின் திருவிழா 60 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது. கடந்த 27ம்தேதி சுவாமிக்கு கண் திறப்பு மற்றும் கங்கணம் கட்டுதலுடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான நேற்று, வீரபத்திர சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்புபூஜை செய்தனர். பின்னர் சக்தி அழைப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், குழந்தைகளுக்கு முடி எடுத்தல், காது குத்துதல், அலகு குத்துதல் மற்றும் அன்னதானம் நடந்தது. இன்று (6ம்தேதி) தெருக்கூத்து நடக்கிறது. நாளை (7ம்தேதி) வீரபத்திர சுவாமிக்கு சுற்று பொங்கல் வைத்தல் மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திப்பிரெட்டிஅள்ளி குருமன்ஸ் இன மக்கள் மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.

The post பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: