லால்குடி, செப்.17: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழப்பெருங்காலூர் கிராமத்தில் சங்கிலி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களின் குடிபாட்டு கோயிலாகும். இதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பூசாரி சுப்பிரமணி கோயிலை பூட்டி விட்டு சென்றவர், நேற்று காலை திறக்க சென்றார்.
அப்போது, கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு சேதமடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோயில் செயல் அலுவலரிடம் தெரிவித்தார். தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்ததில், அங்கிருந்த இரும்பு வேலை பிடுங்கி எடுத்து மர்ம நபர்கள் உண்டியலை உடைக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்தையன், சப்-இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி மற்றும் போலீசார் கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
The post லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.