தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்: 15ம் தேதி பால்குடம், 18ம் தேதி பூப்பல்லக்கு

மதுரை, ஏப். 12: மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 15ம் தேதி பால்குடம், தீச்சட்டி ஊர்வலம் மற்றும் 18ம் தேதி பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் உபகோயிலான தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 20ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி, தெப்பக்குளம் மாரியம்மன், நேற்று முன்தினம் கோயிலில் இருந்து புறப்பாடாகி, மீனாட்சி அம்மன் கோயிலை வந்தடைந்தார். அங்கு கோயிலில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. நேற்று மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி காட்சி அளித்தார். அப்போது மீனாட்சி சுந்தரேசுவரரிடம் இருந்து கொடிபட்டத்தை பூசாரி பெற்றுக்கொண்டு அவர் யானை மீது அமர்ந்து 4 சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து மாலையில் தெப்பக்குளம் கோயிலை சென்றடைந்தார். பின்னர் இரவு 11 மணிக்கு மேல் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

அப்போது அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல், முளைப்பாரி முத்து பதித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 5ம் நாளான 15ம் தேதி இரவு 7.25 மணிக்கு மேல் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அன்று மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து காட்சி அளிப்பார். 7ம் நாளான 17ம் தேதி திருவிளக்கு பூஜையும், பங்குனி விழாவின் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு 18ம் தேதியும் நடக்கிறது. 19ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் சட்டத்தேரில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். 20ம் தேதி காலை 6 மணி முதல் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறும். பின்னர் இரவு 7.25 மணிக்கு மேல் தீர்த்தவாரியுடன் பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாச்சலம் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

The post தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்: 15ம் தேதி பால்குடம், 18ம் தேதி பூப்பல்லக்கு appeared first on Dinakaran.

Related Stories: