திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து 2வது நாளாக கள்ளச்சாராய வேட்டை * 37 பேர் கைது: 680 லிட்டர் சாராயம் பறிமுதல் * ஜவ்வாதுமலையில் சாராய ஊறல் அழிப்பு கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி எதிரொலி

திருவண்ணாமலை, ஜூன் 22: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து 2வது நாளாக கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அதில், 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து, 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக, நீதி விசாணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் இதுபோன்ற துயர சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

அதையொட்டி, மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு (கலால்) டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமையில், மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அந்தந்த பகுதிகளில் சம்மந்தப்பட்ட சப் டிவிஷன் டிஎஸ்பிக்கள் தலைமையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த அதிரடி சோதனையில், 16 பெண்கள் உள்பட மொத்தம் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 680 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், ஜவ்வாதுமலை பகுதியில் நடந்த சோதனையில், பேரல்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1300 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதோடு, கள்ளச்சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபடுவோரை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து 2வது நாளாக கள்ளச்சாராய வேட்டை * 37 பேர் கைது: 680 லிட்டர் சாராயம் பறிமுதல் * ஜவ்வாதுமலையில் சாராய ஊறல் அழிப்பு கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி எதிரொலி appeared first on Dinakaran.

Related Stories: