தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களின் பிரச்னைகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை: மாமன்ற உறுப்பினர்கள் சரமாரி குற்றச்சாட்டு

தாம்பரம், ஏப். 27: உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில், குப்பை அகற்றுவது, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்னை உள்ளிட்ட எந்த பிரச்னைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று அமைச்சரிடம் மாமன்ற உறுப்பினர்கள் சரமாரியாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் அழகுமீனா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முதலில் பொதுமக்கள் மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் சார்பில் ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள பிரச்னைகள் மற்றும் தேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர். இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, குப்பை அகற்றுதல், தெருவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 148 மனுக்கள் பெறப்பட்டன. இதை தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் மண்டல குழுத் தலைவர்கள் காமராஜ், இந்திரன், ஜோசப் அண்ணாதுரை, கருணாநிதி, நியமனக்குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர், கல்விக்குழுத் தலைவர் கற்பகம் சுரேஷ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாநகராட்சி அதிகாரிகள் குறித்து பல்வேறு புகார்களை அமைச்சரிடம் முன்வைத்தனர்.

அதில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான வார்டுகளில் குப்பையை சரியாக அகற்றுவது இல்லை, பாதாள சாக்கடை பணிகள் முழுமை அடையாமல் உள்ளது. தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. குடிநீர் பிரச்னை உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் பொதுமக்களுக்கு குடிநீர் அத்தியாவசியமாக உள்ளது. கிணறுகள் சுத்தம் செய்தல், பழுதடைந்த சிறு மின்விசை தொட்டிகள், குடிநீர் இணைப்புக்கான பைப்புகள் சீரமைத்தல், தண்ணீர் லாரிகள் பற்றாக்குறை என எந்த ஒரு அத்தியாவசிய தேவைக்கும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதோடு, மாமன்ற உறுப்பினர்கள் எந்த பிரச்னை குறித்து புகார் அளித்தாலும் அந்த பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுக்காமல், கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

இதுதொடர்பாக பொறியாளர் பிரிவு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினர்களை அதிகாரிகள் அலட்சியமாக பேசுகின்றனர். மாநகராட்சி இளநிலை பொறியாளர்கள் வெங்கடேசன், பிரபாகரன் உள்ளிட்டோர் புகார்களை அலைக்கழிப்பதோடு எந்த ஒரு பணிகளிலும் ஈடுபடாமல் உள்ளனர். பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு வேலை நடைபெறாமல் உள்ளன. சில பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்படாமல் உள்ளது. பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் பணியை செய்யாமல் இருக்கின்றனர். ஏன் பணிகள் நடைபெறவில்லை என்று கேட்டால், செய்து முடித்த பணிகளுக்கு பில் கொடுக்கவில்லை என்பதால் எங்களால் பணிகள் செய்ய முடியவில்லை என தெரிவிக்கின்றனர். இதுபோல பல்வேறு பிரச்னைகள் மாநகராட்சியில் உள்ளது என அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் சரமாரியாக புகார் அளித்ததோடு, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அலட்சியப்படுத்தினால் நடவடிக்கை பாயும் – அமைச்சர் எச்சரிக்கை
கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘மக்கள் பிரதிநிதிகளான மாமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் குடிநீர் பிரச்னையை ஏன் சரி செய்யவில்லை, எதனால் மாமன்ற உறுப்பினர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை, குடிநீர் பிரச்னைகளை உடனுக்குடன் சரி செய்து பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். மாமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்’’ என மாநகராட்சி அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார். அதோடு தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக ஆய்வுக்கு வந்து கூட்டம் நடத்துவேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

The post தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களின் பிரச்னைகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை: மாமன்ற உறுப்பினர்கள் சரமாரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: