திருவண்ணாமலையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ரஷ்ய இளம்பெண் பலாத்காரம் தூதரக அதிகாரி நேரில் விசாரணை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து ரஷ்ய இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தூதரக அதிகாரி நேற்று நேரில் விசாரணை நடத்தினார். இதற்கிடையே விடுதி இயங்கிய அபார்ட்மென்ட்டுக்கு நேற்று அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. திருவண்ணாமலை- செங்கம் சாலை கஸ்தூரி நகரில் தனியாருக்கு சொந்தமான பேரடைஸ் அபார்ட்மென்ட்டில் தங்கியிருந்த, 22 வயது ரஷ்ய நாட்டு இளம்பெண், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, அபார்ட்மென்ட் நிர்வாகிகள் நீலகண்டன், அவரது தம்பி பாரதி, நண்பர்களான ஓட்டல் உரிமையாளர் மணிகண்டன், வாடகை கார் டிரைவர் வெங்கடேசன், ஓட்டல் ஊழியர் சிவா ஆகியோரை கைது செய்து, கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர். இதில் மேலும் சிலருக்கு ெதாடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, அபார்ட்மென்ட்டில் தங்கியிருந்தவர்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து வந்து நேற்று விசாரித்தனர்.

அதோடு, சம்பந்தப்பட்ட அபார்ட்மென்ட்டில் நடத்திய சோதனையில், அதிக மயக்கம் தரும் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரஷ்ய இளம்பெண் தங்கியிருந்த அறையில், ₹60 ஆயிரம் இந்திய பணம், 30 ஆயிரம் மதிப்பு ரஷ்ய டாலர், மும்பையில் இருந்து சென்னைக்கு வந்ததற்கான விமான டிக்கெட்டுகள் இருந்துள்ளன.

இந்நிலையில், திருவண்ணாமலையில் அனுமதியின்றி செயல்படும் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் குறித்த விபரங்களை நேற்று போலீசார் சேகரித்தனர். இதற்கிடையில் திருவண்ணாமலையில் உள்ள லாட்ஜ் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் எஸ்பி பொன்னி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, அனைத்து லாட்ஜ் வரவேற்பு அறைகளிலும் காவல் நிலைய தொலைபேசி எண் எழுதியிருக்க வேண்டும், வெளிநாட்டினர் மற்றும் சந்தேகப்படும் நபர்கள் தங்கினால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம்பெண்ணை, சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் குடியுரிமை ஆவண ஆய்வு பிரிவு அதிகாரி டென்னீஷ் நேற்று நேரில் சந்தித்தார். அவருடன், எஸ்பி பொன்னி இருந்தார்.

அப்போது, சுய நினைவு திரும்பியும், தெளிவாக பேச இயலாத நிலையில் அவர் இருந்துள்ளார். எனவே, இதுதொடர்பாக எடுக்கப்பட்டுள்ள சட்டப்படியான நடவடிக்கை, மருத்துவ சிகிச்சை போன்ற விபரங்களை தூதரக அதிகாரி விசாரித்தார். அப்போது, இளம்பெண் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், கடந்த 14ம் தேதி முதல் நேற்று முன்தினம் இரவு வரை தொடர்ந்து மயக்க நிலையில் இருந்ததால் அதிக சோர்வுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ரஷ்ய இளம்பெண் பலாத்காரம் நடந்த அபார்ட்மென்ட்டுக்கு, திருவண்ணாமலை தாசில்தார் மனோகரன் நேற்று மாலை `சீல்’’ வைத்தார். தங்கும் விடுதியாக செயல்பட முறையான அனுமதி பெறாமல், தனிநபர் அடுக்குமாடி வீடு என பதிவு செய்து, வரிசெலுத்தாமல் இருந்துள்ளனர். எனவே, வரி மோசடி, சட்டவிராத செயல்கள் உள்ளிட்ட காரணத்தால் அபார்ட்மென்ட்டுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: