செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார்

 

குன்றத்தூர், மார்ச் 4: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே நேற்று, போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.பின்னர், அவர் பேசுகையில், ‘போலியோ நோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில், 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. குறிப்பாக வேறு மாநிலத்திலிருந்து இங்கு குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள்,செங்கல் சூளையில் பணிபுரிவோரின் குழந்தைகள், நரிக்குறவர் குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதன் பலனாக இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 93,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  எனவே, இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றார். இதில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, குன்றத்தூர் நகர்மன்ற தலைவர் கோ.சத்தியமூர்த்தி, அரசு அலுவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

* 2,38,231 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே நேற்று காலை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் சிறு,குறு மற்றும் நடுத்தரநிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட 1,288 ஆரம்ப சுகாதார மையங்களில் சுமார் 2,38,231 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் வழங்கும் பணிகள் துவங்கின. இதில், கருணாநிதி எம்எல்ஏ, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர் பரணிதரன், 2வது மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறைமலை நகர் நகர்மன்ற தலைவர் சண்முகம் தலைமையில், நகர்மன்ற துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன், நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமினை செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் துவங்கி வைத்தார்.
மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் தொடங்கி வைத்தார்.

அப்போது, பெற்றோர் ஆவர்மாக தங்களது குழந்தைகளை அழைத்து வந்து, போலியோ சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். முன்னதாக, சுகாதார துறை ஊழியர்கள் சோப்பு மற்றும் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டு சென்றனர்.

The post செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: