சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு பணியை உதவியாளர்கள் மேற்கொள்ள தடை: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த அலுவலகங்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில், அதிக அளவில் பத்திரம் பதிவாகும் அலுவலகங்களில் 2 சார்பதிவாளரும், சிறிய அலுவலகங்களில் ஒரு சார்பதிவாளர் வீதம் பணியாற்றி வருகின்றனர். ஆனால், சார்பதிவாளர்கள் சிலர் பல்வேறு காரணங்களுக்காக பதிவுப்பணியில் இருந்து நிர்வாக பணிக்கு மாற்றப்பட்டனர். இதனால், சார்பதிவாளர்கள் பற்றாக்குறை காரணமாக பல அலுவலகங்களில் தற்போது வரை உதவியாளர்கள் கூடுதல் பொறுப்பாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, மாநிலம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் இளநிலை உதவியாளர், உதவியாளர்கள் சார்பதிவாளர்கள் கூடுதல் பொறுப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகங்களில்தான் பதிவின்போது உரிய விதிகள் பின்பற்றப்படுவதில்லை என்கிற புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் பதிவு கட்டணம் நிர்ணயம் செய்வதில் குளறுபடி, அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரம் பதிவு செய்வதாக பல அலுவலகங்கள் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, பொதுமக்கள் ஏராளமானோர் தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இதை தொடர்ந்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்களில் உதவியாளர்கள், சார்பதிவாளராக கூடுதல் பொறுப்பு வகிக்க தடை விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சார்பதிவாளர்கள் விடுப்பில் சென்றால் கூட நிர்வாக சார்பதிவாளர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இந்த உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து, சார்பதிவாளர் அலுவலகங்களில் உதவியாளர்களுக்கு பதிலாக நிர்வாக பணிகளில் உள்ள சார்பதிவாளர்களை பதிவுப்பணியில் ஈடுபடுத்தவும் மண்டல டிஐஜிக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்பேரில், மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் சார்பதிவாளர் நிலையிலான அதிகாரிகளை, நியமனம் செய்யும் பணியில் மண்டல டிஐஜிக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.* காலை 10 மணிக்கு பணியில் ஆஜராக வேண்டும்தமிழக பதிவுத்துறை ஐஜி சிவன் அருள், சார்பதிவாளர்கள் காலை 10 மணிமுதல் பதிவுப் பணிக்கு தயாராக பதிவு அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்து பணிபுரிய வேண்டும். சார்பதிவாளர்கள் எந்தவித புகார்களுக்கும் இடமின்றி பணியாற்ற வேண்டும். புகார்கள் வந்தால் தயவு தாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் உடனுக்குடன் மிகுந்த மரியாதையுடன் திரும்ப வழங்கப்பட வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்….

The post சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு பணியை உதவியாளர்கள் மேற்கொள்ள தடை: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: