கோயில்களில் நடக்கும் திருமணங்களுக்கு திருமணமாகாதவர் என சான்றுஅளித்தால் போதும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு திருமணமாகாதவர் என்ற சான்று சமர்ப்பித்தால் மட்டுமே போதுமானது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்பு: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற இதுவரை இதர சான்றிதழ்களுடன் “முதல் திருமண சான்றும்” கோரப்பட்டு வந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையானது “முதல் திருமண சான்றுக்கு” பதிலாக இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும் “திருமணமாகாதவர்” என்ற சான்றினை பெற்றுக்கொள்ள தெளிவுரை வழங்கியுள்ளது. ஆகவே, இனி வருங்காலங்களில் கோயில்களில் திருமணம் நடத்த விரும்பும் பொதுமக்கள் “திருமணமாகாதவர்” என சான்றினை இ-சேவை மையங்கள் மூலம் பெற்று சம்பந்தப்பட்ட கோயில்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்து கோயில்களின் அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கோயில்களில் திருமணம் நடத்த அனுமதி வழங்குவதற்கு உரிய சான்றிதழ்களை தவிர வருவாய் துறையால் வழங்கப்படாத இதர சான்றிதழ்களை கோரினால் அறநிலையத்துறையின் தலைமை அலுவலக தொலைபேசி (044-28339999) எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post கோயில்களில் நடக்கும் திருமணங்களுக்கு திருமணமாகாதவர் என சான்றுஅளித்தால் போதும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: