எஸ்பிகே நிறுவனங்களில் 5வது நாளாக சோதனை : நாகராஜனிடம் அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை

சென்னை,:விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அனந்தபுரி நகரை சேர்ந்தவர் செய்யாத்துரை (65). இவரது மகன்கள் கருப்பசாமி, நாகராஜன், பாலசுப்பிரமணி, ஈஸ்வரன் ஆகியோர் ‘எஸ்பிகே அண்ட் கோ’ பெயரில் அரசு நெடுஞ்சாலைத்துறை பணிகளை டெண்டர் எடுத்து செய்து வருகின்றனர். எஸ்பிகே நிறுவனம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள செய்யாதுரை வீடுகள், சொகுசு ஓட்டல், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.சோதனையில் கிலோ கணக்கில் தங்கம், பல கோடி பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின. 15க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாத்துரையின் வணிக வளாகத்தில் வருமான வரித்துறையினர் தற்காலிக அலுவலகம் அமைத்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காததால் சென்னையில் இருந்து மண்டல இணை கமிஷனர் ஜெயராகவன் தலைமையில் துணை கமிஷனர் சங்கர் கணேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் மாலை அருப்புக்கோட்டை வந்தனர்.

முதல்வர், துணை முதல்வரின் மகன்களோடு செய்யாத்துரையின் மகன் நாகராஜன் நெருக்கம் என்பதால், அவரை சென்னையிலிருந்து அருப்புக்கோட்டை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். நாகராஜனின் வீட்டில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு விசாரணை தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.

ெநடுஞ்சாலைத்துறையில் தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்கள் எப்படி கிடைத்தன? யார் உதவி செய்தார்கள் என்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த முறைகேடுகளில் தொடர்புடைய மூத்த அமைச்சர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், குடும்பத்தினர் தொடர்பாகவும் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு, விசாரணை நடத்தியுள்ளனர். இதில் பல்வேறு அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாத்துரை மற்றும் அவர்களது மகன்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகளில் வருமானவரித்துறையினரின் சோதனை 5ம் நாளாக நேற்றும் தொடர்ந்தது. மேலும் செய்யாத்துரை மற்றும் அவரது மகன் கருப்பசாமியிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. நேற்று மதியம் சென்னை மண்டல இணை கமிஷனர் ஜெயராகவன், துணை கமிஷனர் சங்கர்கணேஷ் ஆகியோர் மதுரை வந்து விசாரணை நடத்தினர். மேலும் சென்னை தலைமை நெடுஞ்சாலைத்துறை பொறியாளர், மதுரை மற்றும் விருதுநகர் கோட்ட பொறியாளர்களிடமும் விசாரணை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: