ஆதிதிராவிடர் கல்விக் கட்டணத்தை முழுமையாக தமிழக அரசு ஏற்கும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை:  ஆதிதிராவிடர் கல்வி கட்டணத்தை முழுமையாக தமிழக அரசு ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புரட்சி பாரதம் கட்சியின் 40வது ஆண்டு விழா நடைபெற்றது, இதில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆதிதிராவிடர் மக்களுக்கு கல்விக்கட்டனத்தை  முழுமையாக அரசு வழங்கும். ஒரு சில காரணத்தால் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கி வந்த கல்வி கட்டணம் தடைப்பட்டு இருந்தது, இனி  ஆதிதிராவிடர் மக்களுக்கு கல்விக்கட்டனத்தை முழுமையாக தமிழக அரசு வழங்கும்.

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கொண்டு வரும் திருத்ததிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம்.  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எப்போதுமே அதிமுக அரசு துணை நிற்கும் என்றார்.  புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி பேசுகையில், ‘‘இந்த அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்ய நாங்கள் என்றும் துணை  நிற்போம். ஜெ.ஆட்சியில் நடந்ததினை போல அதை விட சிறப்பாகவும் தற்போது தமிழ்நாடு அரசு செய்து கொண்டு இருக்கிறார்கள்’’ என்றார். மேலும் துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்  பேசினார்.. இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறையில் சிறந்தவர்களுக்கான விருதுகளை முதல்வர் மற்றும் துனை முதல்வர்  வழங்கி கவுரவித்தனர்.

Related Stories: