கனமழை எச்சரிக்கை எதிரொலி மீட்பு பணிக்கு 75 ஆயிரம் பேர் தயார்: தேவையின்றி வெளியே வரவேண்டாம் டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள்

சென்னை:  தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 12ம் தேதி வரை கன மழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் காவல் நிலைய அதிகாரிகள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படை காவலர்கள், தமிழ்நாடு ஊர்க்காவல்படை என மொத்தம் 75 ஆயிரம் பேர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். இவர்களில் 10 ஆயிரம் பேர் உயிர் காக்கும் விசேஷ பயிற்சி எடுத்தவர்கள்.  இதுதவிர 250 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புப்படை, மீட்புப்படகுகள், மரம் வெட்டும் கருவிகள் மற்றும் சுவர் துளைக்கும் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்களில் 3 அணிகள் சென்னை மாநகர காவல் துறையிலும், ஒரு அணி தஞ்சையிலும், ஒரு அணி கடலூரிலும் உள்ளனர். சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களில் 15 சிறப்பு காவல்படையினர் மாநகர ஆணையருக்கு உதவ அனுப்பப்பட உள்ளனர். 300 கடலோர காவல் படை வீரர்கள் சிறு படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்களோடு 50 பேர் கொண்ட தன்னார்வ மீனவ இளைஞர்கள் இணைந்து பணியில் ஈடுபடுவார்கள். தேசிய நீச்சல் மிட்புக் குழு டிஜிபி அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது. 10 ஆயிரம் ஊர்க்காவல் படை வீரர்கள் மாநிலம் முழுவதும் காவல் துறையினரோடு இணைந்து செயல்பட தயார் நிலையில் உள்ளனர். 10 மிதவை படகுகள் மற்றும் 364 பேரிடர் மீட்புப்பயிற்சி பெற்ற ஊர்க்காவல் படையினர் நீர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல் துறை 100, தீயணைப்பு துறை 101, பொது எண் 112,  அவசர ஊர்தி 108, காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள்; 044-28447701, 044- 28447703 (தொலைநகல்), சென்னை மாநகர காவல் பொதுமக்கள் குறை தீர்ப்பு பிரிவு எண்; 044-23452380 மற்றும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 044-23452359 ஆகிய எண்களில் அழைக்கலாம். பொதுமக்களுக்கு வேண்டுகோள்* அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற காரணத்திற்காக வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.* ஆறு, மற்றும் ஓடைகளில் வெள்ளம் செல்லும் போது தரைப்பாலங்களின் மேல் கடப்பதை தவிர்க்கவும்.*  நீர் நிலைகளில் இறங்காமல் குழந்தைகளை பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.* தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் மோட்டார் வாகனங்களை மேடான பகுதிகளில் நிறுத்திக்கொள்ளவும்.* கீழ்தளத்தில் வாழும் மக்கள் மின்னணு சாதனங்களை மேல்தளத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.* சாலை பள்ளங்கள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகளால் ஆபத்து ஏற்படும், எனவே அதிகாலை வேளையில் இருட்டான நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும்.* இடி, மின்னல் சமயங்களில் மரத்தடி மற்றும் உயர்ந்த கோபுரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்கவும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post கனமழை எச்சரிக்கை எதிரொலி மீட்பு பணிக்கு 75 ஆயிரம் பேர் தயார்: தேவையின்றி வெளியே வரவேண்டாம் டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: