ஏகாட்டூருக்கும் கடம்பத்தூருக்கும் இடையே ரயில் தண்டவாளம் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்

 

திருவள்ளூர், பிப். 5: ஆந்திராவிலிருந்து ரயில்கள் மூலமாகவும், அரசுப் பேருந்து, தனியார் பேருந்து, வேன், ஆட்டோ, கார், இரு சக்கர வாகனம் மூலம் சாலை வழியாகவும் கஞ்சாவை கடத்தி வந்து, சென்னை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் விற்பனை செய்கின்றனர். கஞ்சா புழக்கத்தால் இளைஞர்கள் சீரழிவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. காவல்துறை சார்பிலும், போக்குவரத்து காவல் துறை சார்பிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

கஞ்சாவை கடத்தி வந்தவர்களை கைது செய்வதும், கடத்தி வந்த கஞ்சாவை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சாலை வழியாக கடத்தினால் காவல் துறையினர் பிடித்து கைது செய்வதால், தற்போது ரயில் மூலம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதனால் ரயில்வே போலீசாருக்கு கிடைக்கும் தகவலையடுத்து அவ்வப்போது ரயில்களில் சோதனையும் செய்து கஞ்சா கடத்தி வருபவர்களை கைது செய்தும் வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரயில் நிலையத்திற்கும் கடம்பத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையே அரக்கோணம் சென்னை மார்க்கத்தில் 3 பைகளில் கஞ்சா கிடப்பதாக திருவள்ளூர் ரயில்வே இருப்புப் பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் சம்பவ இடத்திற்கு சென்று 3 பைகளில் இருந்த சுமார் 4 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். ஆந்திராவிலிருந்து திருவள்ளூர் வழியாக சென்னைக்கு ரயிலில் கடத்தி வந்தவர்கள் யாரேனும் இந்த 4 கிலோ கஞ்சாவை வீசியிருக்க கூடும் என இருப்புப் பாதை காவல் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து கைப்பற்றிய 4 கிலோ கஞ்சாவை வியாசர்பாடியில் உள்ள போதை தடுப்பு காவல் பிரிவில் ஒப்படைத்ததாக தெரிவித்தனர்.

The post ஏகாட்டூருக்கும் கடம்பத்தூருக்கும் இடையே ரயில் தண்டவாளம் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: