ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

 

ஊட்டி, ஜன.14: பொங்கல் விடுமுறை மற்றும் வார விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் ஊட்டியை சுற்றுலா பயணிகள் மொய்க்க வாய்ப்புள்ளது. சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14ம் தேதி நாளை முதல் தமிழகத்தில் உள்ள பல பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

வாரவிடுமுறை பொங்கல் பண்டிகை விடுமுறை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வரும் நிலையில், நாளை முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையால், ஊட்டியில் உள்ள அனைத்து ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழியும். அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசலும் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடந்த வாரம் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என தொடர் விடுமுறை வந்த நிலையில், ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ள நிலையில், மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், தற்போது ஊட்டியில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால், காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக காணப்படுகிறது. இந்த காலநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவிக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் குளிரை சமாளிக்க சுற்றுலா பயணிகள் ஸ்வெட்டர், சால்வை மற்றும் தொப்பிகள் போன்ற வெம்மை ஆடைகளை வாங்குவது வழக்கம்.
இதனால், இவைகளின் விற்பனையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, ஊட்டியில் உள்ள வியாபாரிகளுக்கு வெம்மை ஆடைகள், சாக்லெட் மற்றும் இதர பொருட்கள் வியாபாரம் சூடு பிடிக்க வாய்ப்புள்ளது.

The post ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: