ஈரோடு மாவட்டத்தில் லியோ திரைப்படத்துக்கு கட்டுப்பாடு

 

ஈரோடு, அக்.18: ஈரோடு மாவட்டத்தில் லியோ திரைப்படத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஸ் கனகராஜ் தயாரிப்பில் லியோ திரைப்படம் நாளை (19ம் தேதி) வெளியாகிறது. இந்த திரைப்படத்தை 19ம் தேதி முதல் வருகிற 24ம் தேதி வரை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டும் திரையிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் தொடக்க காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சியாக நள்ளிரவு 1.30 மணி அளவில் முடிவடையும் வகையில் திரையிடப்பட வேண்டும். புதிய திரைப்படம் வெளியிடும்போது தியேட்டர்களில் முறையான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தும் வசதிகளை உரிமையாளர்கள் செய்திருக்க வேண்டும். தியேட்டர்களில் கூடுதல் காட்சி நடத்தப்படும்போது சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும்.

தியேட்டர்களின் ரசிகர்கள் வாகனங்கள் எளிதாக உள்ளே வந்து, வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். போலீசாரின் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.ரசிகர்கள் காட்சி அரங்கிற்குள் சிரமமின்றி உள்ளே வந்து, வெளியே செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இருக்கைகள், தியேட்டர்களின் வளாகத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தியேட்டர்களை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும். அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக நுழைவு கட்டணத்தையோ, வாகன நிறுத்த கட்டணத்தையோ வசூலிக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஈரோடு மாவட்டத்தில் லியோ திரைப்படத்துக்கு கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: