ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் பழுதான மேல்நிலை குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணி

ஈரோடு, ஜூன் 23: ஈரோடு காந்திபுரத்தில் ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் பழுதான மேல்நிலை குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணி நேற்று துவங்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி 1வது மண்டலம் 6வது வார்டுக்கு உட்பட்ட காந்திநகரில் 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீரானது காந்தி நகரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நீரேற்றம் செய்யப்பட்டு, குடிநீர் குழாய்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆங்காங்கே சிதலமடைந்தும், நீர் கசிந்தும் பழுதடைந்து காணப்பட்டது. இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம் காந்தி நகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சீரமைக்க பொது நிதியில் இருந்து ரூ.3.90 லட்சம் ஒதுக்கியது. இதன்பேரில், பழுதான மேல்நிலை நீர் தேக்க தொட்டி சீரமைக்கும் கட்டுமான பணி துவக்க விழா நடந்தது. இதில், 6வது வார்டு கவுன்சிலர் தமிழ்பிரியன் தலைமையில், மாநகராட்சி 1வது மண்டல தலைவர் பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பணியை தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திமுக பகுதி அவை தலைவர் சண்முக பிரியன், மாநகர விவசாய அணி அமைப்பாளர் இளங்கோ, பகுதி துணை செயலாளர் மங்கையர்கரசி மற்றும் வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் பழுதான மேல்நிலை குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: