ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

ஈரோடு, ஜூலை 2: ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து நேற்று பணிக்கு திரும்பினர். ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடுவதை கைவிட வேண்டும், இதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ. 725 ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும், மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 22ம் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக மாநகரில் குப்பைகள் ஆங்காங்கே குவியத்தொடங்கியது.

இந்நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் நாகரத்தினம் தலைமையில், ஆணையாளர் ஜானகி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளான ஏஐடியுசி சின்னசாமி, சிஐடியு சுப்பு, எல்பிஎப் கோபால், ஆதித்தமிழர் தொழிற்சங்கம் மாரியப்பன், எல்பிஎப் கிருஷ்ணன், ஏஐடியுசி மணியன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்றும், சம்பளம் தொடர்பான குறைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்ததை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து நேற்று காலை ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு வந்த தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை விவரங்களை தொழிற்சங்க நிர்வாகிகள் விளக்கி கூறினர். தொடர்ந்து, 7 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து தூய்மை பணியாளர்கள் நேற்று காலை முதல் பணிக்கு திரும்பினர்.

The post ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் appeared first on Dinakaran.

Related Stories: