இயற்கை எரிவாயு உற்பத்தியை 10 மில்லியன் மெட்ரிக் டன்னாக விரிவாக்கும் திட்டம் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்: மாவட்ட கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு

பொன்னேரி. நவ.18: இந்தியன் ஆயில் சார்பில் திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியை ஆண்டொன்றிற்கு 5 மில்லியன் மெட்ரிக் டன்னில் இருந்து 10 மில்லியன் மெட்ரிக் டன்னாக விரிவாக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தின் ஒரு பகுதியில், திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு தயாரிக்க பயன்படும் கிடங்கானது இந்தியன் ஆயில் எல்என்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து குழாய்கள் மூலம் மூலப்பொருட்கள் துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டு, சேமிப்பு கிடங்குகள் மூலம் திரவமயமாக்கப்பட்ட எரிவாயு சேமிக்கப்பட்டு, சுற்று வட்டார பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு குழாய்கள் மூலம் அனுப்பப்பட்டு மின்சாரம் தயாரிக்கவும் மற்றும் பல்வேறு உபயோகிப்பிற்காகவும் எரிவாயுவாக பயன்படுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது‌.

அதன்படி இந்தியன் ஆயில் எல்என்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் ஆண்டொன்றிற்கு 5 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்து வந்த இறக்குமதி தற்போது 10 மில்லியன் மெட்ரிக் டன்னாக விரிவாக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் அத்திப்பட்டு கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை‌சந்திரசேகர், மாவட்ட அதிகாரி லிவிங்சன், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜி.ரவி முன்னிலை வகித்தனர். மேலாளர் தக்ஷிணாமூர்த்தி அனைவரையும் வரவேற்று முகாம் குறித்து விளக்கம் அளித்தார்.

கூட்டத்தில், அத்திப்பட்டு, காட்டுப்பள்ளி, எண்ணூர், மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர். மீஞ்சூர் பகுதியில் தொடர்ந்து காற்று மாசு மற்றும் நில மாசடைவதை எடுத்துரைத்த பொதுமக்கள், மாசுவை குறைப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கண்காணிப்பு மையங்கள் அமைக்க வேண்டும் எனவும், தொழிற்சாலையில் இருந்து லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் சிமெண்ட் மற்றும் நிலக்கரி கழிவுகளால் நிலம் மாசடைவதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். மேலும் இயற்கை எரிவாயு திட்டத்தை வரவேற்பதாகவும் இந்த தொழிற்சாலை மூலம் சமூக வளர்ச்சி மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்தியன் ஆயில் நிறுவனம் விரிவாக்கத்திற்கு அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என காட்டுப்பள்ளி ஊராட்சி சார்பில் கோரிக்கை வைத்தனர்.

இந்த கூட்டத்தில் மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், குமார், காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் சேதுராமன், துணைத் தலைவர் வினோதினி வினோத், அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், துணைத்தலைவர் எம்டிஜி கதிர்வேல், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி கடலி, அத்திப்பட்டு புருஷோத்தமன், காட்டுப்பள்ளி மற்றும் அத்திப்பட்டு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாகிகள், இந்தியன் ஆயில் எல்.என்.ஜி பிரைவேட் லிமிடெட் முதன்மை அலுவலர் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post இயற்கை எரிவாயு உற்பத்தியை 10 மில்லியன் மெட்ரிக் டன்னாக விரிவாக்கும் திட்டம் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்: மாவட்ட கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: