அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தை கோயம்பேட்டில் மீட்பு: பெற்றோரிடம் ஒப்படைப்பு

சென்னை: அம்பத்தூரில் இருந்து கடத்தப்பட்ட ஒன்றரை வயது ஆண்குழந்தை கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒரு பேருந்தில் பத்திரமாக மீட்கப்பட்டது. அம்பத்தூர் காந்தி நகர் தாலுகா அலுவலகம் பின்புறம் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து கட்டிட வேலை செய்கின்றனர். இவர்களில்,  ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் (38) என்பவர், மனைவி புத்தினி (22) மற்றும் ஆகாஷ் (8), பிரகாஷ் (6), துர்கி (5), லாக்டவுன் (ஒன்றரை) ஆகிய  4 குழந்தைகளுடன் தங்கி வேலை செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கில் குழந்தை பிறந்ததால், கிஷோர் தம்பதியர் அந்த குழந்தைக்கு லாக் டவுன் என பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர். கடந்த 6ம் தேதி  கிஷோர்  தங்கியிருந்த குடிசை வீட்டில் இருந்து லாக் டவுன் குழந்தை தூங்கி கொண்டிருந்தது. பின்னர்,  அந்த குழந்தை திடீரென்று காணவில்லை. இதனையடுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. புகாரின்படி இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போலீசார் குழந்தையை யாராவது கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகமடைந்தனர். மேலும், ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில்  தனிப்படை அமைக்கப்பட்டு  குழந்தையை போலீசார் தேடினர். மேலும், தனிப்படை போலீசார் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடத்தப்பட்ட குழந்தையின் புகைப்படத்தை ஒட்டி  அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். மேலும், தனிப்படை போலீசார் குழந்தையை அம்பத்தூர் ஏரியில் வீசி இருக்கலாம் என்ற கோணத்திலும் தீயணைப்பு படையினர் மூலம் தேடினர். இதோடு மட்டுமல்லாமல், போலீசார் மோப்ப நாய் மூலமாகவும் முட்புதர்களில் குழந்தையும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சேலத்திற்கு புறப்படும் கூடிய பஸ்ஸின் பின்புறம் சீட்டில் ஒரு ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது. இதனை பார்த்த கண்டக்டர் கோவிந்த ராமானுஜம் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர். விசாரணையில் அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தை டாக் டவுன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் குழந்தையை அம்பத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், பெற்றோரை வரவழைத்து குழந்தையை ஒப்படைத்தனர் குழந்தையை பெற்று கொண்ட பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். மேலும் குழந்தையை கடத்திய மரம் நபர்கள் யார், அவர்கள் எதற்காக குழந்தையை கடத்தினர் என கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கடத்தியவர்களை தேடி வருகின்றனர்….

The post அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தை கோயம்பேட்டில் மீட்பு: பெற்றோரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: