கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு நிதி உதவி அளித்ததாக சென்னை, கோவை உள்பட 16 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: மும்பை, ஐதராபாத்திலும் நடந்தது

 

சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு நிதி உதவி அளித்ததாக கோவை, சென்னை, மும்பை, ஐதராபாத் என 16 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். கோவை உக்கடம் பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த குண்டு வெடிப்பை இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மூலம் தூண்டப்பட்டு ஜமேஷா முபின் (28) மூலம் நடத்தப்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்தி வருகிறது. இதில் முகமது ரியாஸ் (27), உமர் பாரூக் (28), பெரோஸ்கான் (28), முகமது தல்கா (25) உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இந்த கார் குண்டு வெடிப்பு நிகழ்வுக்கு ெபரிய அளவில் நிதி திரட்டியது என்ஐஏ விசாரணையில் உறுதியானது. அந்த நிதியை குண்டு வெடிப்பு நடத்தி உயிரிழந்த ஜமேஷா முபின் 2 வழிகளில் திரட்டியுள்ளார். ஒன்று கொரோனா தடுப்பூசி போட்டதாக போலி சான்றிதழ் தேவைப்பட்டவர்களுக்கு கொரோனா சன்றிதழ் போலியாக தயார் செய்து கொடுத்த வழியிலும், மற்றொன்று தான் படித்த கோவை அரபிக் கல்லூரிக்கு நன்கொடை என பணத்தை திரட்டியது விசாரணையில் தெரியவந்தது. அந்த வகையில் உயிரிழந்த ஜமேஷா முபின் உடன் 12 பேர் கோவை அரபிக் கல்லூரி நடத்திய ஆன்லைன் வகுப்பு மற்றும் நேரடி வகுப்பில் கலந்துகொண்டு சதி திட்டம் தீட்டியதும், அதில் சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் கார் குண்டு வெடிப்பு நிகழ்வை வழிநடத்தியதும் என்ஐஏ விசாரணையில் உறுதியானது.

இதைதொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் இந்த வழக்கில் தற்போது அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. அதன் முதற்கட்டமாக கார் குண்டு வெடிப்பு நிகழ்வுக்கு நிதி அளித்த நபர்களுக்கு சொந்தமான வீடுகளில் நேற்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. குறிப்பாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பெரோஸ்கான் இஸ்மாயில், முகமது அசாருதீன், நவாஸ் இஸ்மாயில், சதாம், அப்பாஸ் ஆகியோருக்கு சொந்தமான கோவை உக்கடம் அன்பு நகர், கோட்டைப்புதூர், சன்கார்டன், ஜி.எம்.நகர், சரவணம்பட்டி, போத்தனூர் ஆகிய 5 இடங்களில் சோதனை நடந்தது.

சென்னையில் அரும்பாக்கம் மசூதி தெருவை சேர்ந்த ஜமீல் பாஷா உமர் (55) என்பவரின் வீட்டிலும் சோதனை நடந்தது. மேலும், மும்பை, ஐதராபாத் என மொத்தம் 16 இடங்களில் சோதனை நடந்தது. இதில் சட்ட விரோத செயலுக்கு நிதி அளித்த விவரங்கள், வங்கி கணக்கு விவரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு பிறகு தான் முழுமையான தகவல் வெளியாகும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: