முதல் சர்வதேச பல்கலைக்கழக வளாகத்தை நிறுவுவதற்காக உலகளாவிய நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து

 

சென்னை: முதல் சர்வதேச பல்கலைக்கழக வளாகத்தை நிறுவ முன்னணி உலகளாவிய நிவனங்களுடன் தமிழ்நாடு அரசு முதல்வர் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘சப்’ மற்றும் ஜெர்மனியை சேர்ந்த ‘நார்டெக்ஸ்’ ஆகிய 2 முன்னணி உலகளாவிய நிறுவனங்கள், தமிழ்நாட்டின் சென்னையில் தங்கள் மையங்களை முதன்முறையாக அமைக்கவுள்ளன. ‘சப்’ நிறுவனம் அமைக்கவுள்ள உலகளாவிய திறன் மையம் 220 பேருக்கும், ‘நார்டெக்ஸ்’ நிறுவனம் அமைக்கவுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் 1,000 பேருக்கும் வேலைவாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 நிறுவனங்களாலும் 1,220 நல்ல ஊதியம் தரும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

இந்த முதலீடுகள், உயர்மதிப்புடைய உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான முக்கிய சர்வதேச மையமாக சென்னை மாநகரின் நிலையை மேலும் வலுப்படுத்தும். புத்தாக்கத்தை அடிப்படையாக கொண்ட தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தல், அறிவுசார் மற்றும் திறன் சார்ந்த முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் திறன்மிக்க மனிதவளத்திற்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற தமிழக அரசின் தொலைநோக்கு திட்டத்திற்கு ஏற்றாற்போல், இம்முதலீடுகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், உயர்கல்வி துறையில், ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி சார்ந்த பல்கலைகளில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலை (University of Western Australia – UWA), பல்கலை மானியக் குழுவின் 2023ம் ஆண்டின் ஒழுங்குமுறைகளின் கீழ், இந்தியாவில் தனது வளாகத்தை சென்னை நகரில் நிறுவ உள்ளது. இது தமிழ்நாட்டில் அமையும் முதல் சர்வதேச பல்கலைக்கழக வளாகமாகும். சென்னை வேளச்சேரியில் சுமார் 50,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகம், சுமார் ரூ.125 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் 200க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: