மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கு நிகழ்வில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

 

சென்னை: கோவை மருதமலை கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் என சுரேஷ்பாபு என்பவரும், நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் விஜயராகவனும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதி சிவாச்சாரியர்கள் சங்கம் தனியாக மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மருதமலை கோயில் குடமுழுக்கின்போது, சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழிலும் வேள்விகள் நடத்தப்படும் என்றும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். குடமுழுக்கு விழாவில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மந்திரங்கள் ஓதி யாகசாலை பூஜைகள் நடத்தப்படும்.

“சிவாச்சாரியார், ஓதுவார் ஆகியோர் தமிழ் மந்திரங்கள் ஓதுவர். பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்டவை பாடப்படும். யாகசாலையில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். யாக பூஜையின்போது 36 யாக குண்டத்தில் தமிழிலும் வேறு 36 குண்டத்தில் சமஸ்கிருதத்திலும் வேள்விகள் நடத்தப்படும்’’ என்று அறநிலையத்துறை தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து அறநிலையத் துறை சார்பில், ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்குகள் அனைத்தையும் முடித்து வைத்து உத்தரவிட்டார்.

 

Related Stories: