சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக ரூ.9.36 லட்சத்திற்கான காசோலைகளும், 3 பேருக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக ரூ.4.77 லட்சத்திற்கான காசோலைகளும், 4 பெண் பயிற்றுநர்கள், 2 ஆண் பயிற்றுநர்கள் என 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழங்கினார்.
விளையாட்டுத் துறைக்கு அவர்கள் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், ஓய்விற்குப் பின் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்வதற்காகவும், 58 வயதை எட்டிய பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,000 ஓய்வூதியமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 82 நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களும் மற்றும் 13 குடும்ப ஓய்வூதியதாரர்களும் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
