சென்னை: மாமல்லபுரம் பாமக பொதுக்குழுவில், அக்கட்சி தலைவராக மீண்டும் அன்புமணி நேற்று தேர்வு செய்யப்பட்டார். அப்போது மாணிக்கம் தாகூர் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், “காங்கிரசும், பாஜவும் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரவிடாமல் சதி திட்டம் திட்டி வருகிறார்கள். இது சம்பந்தமாக தான் அறிக்கை வெளியிட்டேன். உடனே தமிழ்நாட்டில் புதிதாக வந்திருக்கும் காங்கிரஸ் தலைவர் சட்டை எல்லாம் மடித்து விட்டுக்கொண்டு ஆவேசமாகிறார். நாங்கள் மிலிட்ரிய பார்த்தவங்க.. துப்பாக்கிச் சூட்டையும் பார்த்து விட்டோம். தடியடியை பார்த்து விட்டோம். ஜெயில் எல்லாத்தையும் கூட பார்த்து விட்டோம். நீங்கள் அப்போது பிறந்து கூட இருக்க மாட்டீர்கள். அமைதியாக போய்க் கொண்டிருக்கிறோம். பாமக தனியாக நின்று எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். காங்கிரசால் தனியாக நின்று ஒரு கவுன்சிலர் கூட வெற்றி பெற முடியாது’’ என்றார்.
இந்நிலையில், அன்புமணி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ”அன்பு மணியின் பேச்சை கேட்டேன், மிகவும் சிரிப்பாக இருந்தது. நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர், ‘மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டிடம் அனுமதி பெற வேண்டாம்’ என பதில் கொடுத்துள்ளார். இதனை எதிர்த்து, பாஜவுக்கு நீங்கள் வழங்கி வரும் ஆதரவை திரும்ப பெறுவீர்களா? என்பதுதான் என் கேள்வி. அதற்கு ஏன் இவ்வளவு பதற்றப்படுகிறீர்கள்? சி.பி.ஐ. வழக்கு இருக்கிறது என பதற்றப்படுகிறீர்களா? காங்கிரசை பற்றி நீங்கள் எப்படி பேசமுடியும்? நாமே (பா.ம.க) அதிமுக, பாஜவிடம் தொங்கி அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.
4 எம்எல்ஏக்கள் வெற்றி பெற அதிமுக, பாஜவிடம் கதை ஓட்டி அரசியல் செய்துகொண்டிருக்கிறீர்கள். அதிமுக புண்ணியத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரையும் பெற்றுவிட்டீர்கள். இந்திய அளவில் காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சி. மோடி அரசு மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என சொல்லியுள்ளது. இதை எதிர்த்து மோடி அரசிடம் கேள்வி எழுப்ப போகிறீர்களா? இதனை கண்டித்து இந்த அரசுக்கு கொடுத்திருக்கும் ஆதரவை திரும்ப பெற போகிறீர்களா இதற்கு பதில் சொல்லுங்க?” என கேள்வி எழுப்பியுள்ளார். இது இரு கட்சியி னரிைடயே கொந் தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
