புதுடெல்லி: மக்களவையில் காரசார விவாதத்தை தொடர்ந்து, பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அனுபவத்திலிருந்து பாடம் கற்க தயாராக இருப்பதாக ஒன்றிய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்களும், மாணவர்களும் டெல்லி ஜந்தர்மந்தரில் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.
இதைத் தொடர்ந்து, வினாத்தாள் கசிவை தடுக்க, பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வருவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதே போல, கடந்த 2024ல் நீட் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு எழுந்த போது, பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்டம் 2024ஐ ஒன்றிய அரசு இயற்றியது. அந்த சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் அம்சங்களை சேர்த்து பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026ஐ ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த 27ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மீதான 10 மணி நேர விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எம்பிக்களைத் தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று விவாதத்தில் பங்கேற்று பேசினார். அப்போது ராகுல் காந்தி, டெல்லியில் நடந்த மாணவர் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டவர் அமித் ஷா, அனைத்து பல்கலைக்கழகத்தையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றி உள்ளது என பேசியதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்து பேசினார். இறுதியில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்து பேசுகையில், ‘‘வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அரசு விரைவாக செயல்பட்டுள்ளது. 2024ல் வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், கடந்த சில ஆண்டுகளில் வினாத்தாள் கசிவு தொடர்பான தற்கொலைகளின் விகிதம் குறைந்துள்ளது.
இந்த திருத்த மசோதா, அனுபவத்திலிருந்து அரசு பாடம் கற்க தயாராக இருப்பதை காட்டுகிறது’’ என்றார். ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘‘நாடாளுமன்ற நடைமுறைகள், அரசின் செயல்பாடுகள் குறித்த அறிவு ராகுல் காந்திக்கு இல்லை. எதிர்க்கட்சிகள் இந்த மசோதா மீது தீவிரமாக விவாதித்து ஆலோசனை வழங்குவதற்கு பதிலாக இதை அரசியலாக்க முயற்சிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் நடத்தையை பார்த்து ஆச்சரியப்படுகிறேன்’’ என்றார்.
இதையடுத்து, 10 மணி நேர காரசார விவாதம் நிறைவடைந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்களவை இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், வினாத்தாள் கசிவு குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.
* மசோதாவின் முக்கிய அம்சங்கள் பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
* குற்றங்களை விசாரிக்க, எந்தவொரு அமர்வு நீதிமன்றத்தையும் சிறப்பு விரைவு நீதிமன்றமாக நியமிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் அதிகாரம் அளிக்கிறது.
* சிறப்பு விரைவு நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நாள்தோறும் நடைபெறுவதையும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது.
* எந்தவொரு குற்றத்தையும் விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது.
* இச்சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களுக்கான விசாரணைகள் 2 மாத காலத்திற்குள் முடிக்கப்படுவதை உறுதி செய்கிறது.
* இச்சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை நடத்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் அதிகாரம் அளிக்கிறது.
* எந்தவொரு தீர்ப்பு, தண்டனை அல்லது உத்தரவுக்கும் எதிராக உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்விடம் மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறையையும், மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் அதைத் தீர்ப்பதற்கான ஏற்பாட்டையும் செய்கிறது.
* புதிய சட்டத்தின் கீழ், வினாத்தாள் கசிவு அல்லது முறையற்ற நடைமுறைகளில் ஈடுபடும் தனிநபர்களுக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
* குழுவாக செய்யப்படும் குற்றங்களுக்கு, குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க மசோதா முன்மொழிகிறது.
* யுபிஎஸ்இ, எஸ்எஸ்சி, ரயில்வே, வங்கித் தேர்வு மற்றும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆகிய ஒன்றிய அரசின் அமைப்புகளால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுப்பதை இச்சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
* வந்தே மாதரத்தை அவமதிப்பதை குற்றமாக்கும் மசோதா நிறைவேற்றம்
தேசிய பாடலான வந்தே மாதரத்தை அவமதிப்பதை குற்றமாக்கும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்ட திருத்த மசோதா 2026, மாநிலங்களவையில் நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 1971ல் இயற்றப்பட்ட தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டத்தை திருத்தும் இந்த மசோதா, தேசியக் கொடி, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசிய கீதம் உள்ளிட்ட நாட்டின் தேசியச் சின்னங்களை அவமதிப்பது அல்லது அவற்றுக்கு மரியாதை குறைவான செயல்களில் ஈடுபடுவதை குற்றமாகக் கருதி, அதற்காக 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தில் தேசிய பாடலான வந்தே மாதரத்தையும் சேர்க்கிறது. மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய விவகாரத்தை விவாதிக்காததை கண்டித்து இந்த மசோதா விவாதத்தில் பங்கேற்காமல் காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
* பிறப்பு, இறப்பு பதிவு மசோதா தாக்கல்
* பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகளை தாமதமாக செய்வதை தடுப்பதற்காக விதிமுறைகளை கடுமையாக்கும் பிறப்பு, இறப்பு பதிவு திருத்த மசோதாவை ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
* ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் குழுவிற்கு, குளிர்காலக் கூட்டத்தொடரின் இறுதி வரை கால நீட்டிப்பு வழங்க மக்களவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
