புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்துகள் பதிவிட்டது தொடர்பாக டெல்லி காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டங்களின்போதும், அதற்கு பின்னரும் பிரதமர் மோடி மற்றும் பாதுபாப்பு படையினருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் வௌியிடப்பட்டதாக டெல்லி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லி காவல் துறையின் சிறப்பு பிரிவான ஐஎஃப்எஸ்ஓ., பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், சமூக ஊடக தளமான எக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள ஐஎஃப்எஸ்ஓ., “அடையாளம் காணப்பட்ட பதிவுகளை நீக்க வேண்டும் அல்லது அவற்றுக்கான அணுகலை முடக்க வேண்டும் அல்லது விசாரணைக்கு தொடர்புடைய அனைத்து மின்னணு பதிவுகளையும் பாதுகாக்க வேண்டும். அத்துடன் அவதூறு பதிவுகள் வௌியிட்ட கணக்குகளின் விவரங்களை தர வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
