மும்பை: குடும்பத்தினர் தமக்கு இழைத்த கொடுமைகள் மற்றும் அநீதிகள் குறித்து பிரபல நடிகை ஷில்பா ஷிண்டே ரியாலிட்டி ஷோவில் உருக்கமாக பேசியுள்ளார். பிரபல சின்னத்திரை நடிகை ஷில்பா ஷிண்டே, பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தனது சொந்த குடும்பத்தினர் தமக்கு இழைத்த அநீதிகள் குறித்து பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், ‘எனக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை நடந்த முடிந்து வெறும் 5 நாட்களே ஆன நிலையில், நள்ளிரவில் எனது சொந்த சகோதரர் மற்றும் தாயாரால் மும்பை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். வெளி நபர்களின் தூண்டுதலின் பேரில் எனது சுயமரியாதையை சீண்டி பார்க்கும் வகையில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.
இந்த கசப்பான சம்பவத்திற்கு பிறகே மும்பையை விட்டு நிரந்தரமாக வெளியேறி கர்ஜத் பகுதிக்கு குடிபெயர்ந்தேன். மக்கள் குடும்பம் குடும்பம் என்று சொல்கிறார்கள், ஆனால் எனக்கு குடும்பம் இருந்தும் நான் அநாதையாகவே வாழ்கிறேன். இதற்காக யாரிடமும் பரிதாபத்தை தேடவில்லை. தற்போது மும்பைக்கு வரும் போதெல்லாம் தங்கும் விடுதிகளிலேயே தங்குகிறேன். எனது சொந்த குடும்பத்தினரால் காலில் அணியும் செருப்பை போல நடத்தப்படுகிறேன். இனி எக்காலத்திலும் குடும்பத்தினருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள போவதில்லை. எனது சொத்தில் உறவினர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என முறைப்படி எழுதி வைத்துவிட்டேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, ஆதரவற்ற மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய தங்கும் விடுதி ஒன்றை கட்டப்போகிறேன்’ என்று கூறினார்.
