புதுடெல்லி: 2005ம் ஆண்டு ஒடிசாவில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்து. இதையடுத்து இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் , நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,
‘‘நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறித்த வழக்கில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் முடித்து வைக்கப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. சிபிஐ தாக்கல் செய்த இரண்டு இறுதி அறிக்கைகளையும் நாங்கள் ஆய்வு செய்தபோது, மன்மோகன் சிங்கிற்கு எதிரான வழக்கை தொடருவதற்கு காரணங்கள் இல்லை என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
* பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை உச்ச நீதிமன்றம் முழுமையாக விடுவித்ததை அடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார். கபில் சிபல் எம்பி கூறுகையில்,’மன்மோகன்சிங்கின் குடும்பத்தினர், நலம் விரும்பிகள் மற்றும் எனக்கும் இது மிகுந்த மனநிறைவைத் தரும் தருணம். இது அவரது நேர்மைக்குக் கிடைத்த அங்கீகாரம்’ என்றார்.
