சென்னை: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்துமுதல்வர், அமைச்சர்கள், துறை செயலாளர்கள் பிறப்பிக்கும் மக்களுக்கான உத்தரவுகள் அரசு ஊழியர்கள் மூலம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, செயல்பாட்டு வரும். இங்குள்ள பிரதான கட்டிடத்தில் சுமார் 1,000 பேரும், அதே வளாகத்தில் உள்ள 10 மாடி நாமக்கல் கவிஞர் மாளிகையில் 2,500 அரசு ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள்.
பிரதான கட்டிடத்தின் முதல் மாடியில் முதல்வர் அலுவலகம் உள்ளது. பாரம்பரியமான இந்த அலுவலகத்தில் தான் இதற்கு முன் இருந்த முதல்வர்கள் பணியாற்றினர். முதல்வர் பயன்படுத்தும் 1வது நுழைவாயிலை வேறு யாரும் பயன்படுத்துவதில்லை. முதல்வர் அலுவலகம் உள்ள மாடியில் மீட்டிங் ஹால், ஓய்வு அறை என சகல வசதியும் உள்ளது. மற்ற இடங்களில் பணியாற்றுபவர்கள் இடநெருக்கடியில் பணியாற்றினாலும் முதல்வருக்கு சிறிதளவுகூட நெருக்கடி இல்லாத நிலை உள்ளது. அவரை சந்திக்க வரும் விவிஐபிக்களும் எந்த சிரமமும் இல்லாமல் வந்து பார்த்து செல்லும் வசதி உள்ளது.
இந்நிலையில், திடீரென முதல்வரின் அலுவலகம் இடநெருக்கடியாக உள்ளதாக கூறி, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் முதல்வர் விஜய் தனது அலுவலகத்தை மாற்றி அமைத்து வருகிறார். எந்தவித முன்னறிப்பும் இல்லாமல் அலுவலகத்தை மாற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுபற்றிய செய்தி வெளியான பிறகுதான், இடநெருக்கடி காரணமாக தான் முதல்வர் அலுவலகம் மற்றும் அவரது செயலாளர்கள், ஆலோசகர்கள் அறை மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று முன்தினம் விளக்கம் அளித்தது.
மேலும், முதல்வரின் அலுவலகம் 10வது தளத்துக்கு மாற்றப்படுவதால் அங்கு இதுவரை செயல்பட்டு வந்த 3 துறைகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக அதிகாரிகளை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றும் பணி தொடங்கி விட்டது.முதல்வரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்துக்கு மாற்றப்படுவதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சங்க தலைவர் கு.வெங்கடேசன் கூறியதாவது:முதல்வரின் அலுவலகம் மாற்றப்படுவதற்கு முன் இங்குள்ள ஒரே சங்கமான எங்களிடம் பொதுத்துறை அதிகாரிகள் விவாதிக்க இல்லை. இது தவறான முன்னுதாரணம். முதல்வரின் பாதுகாவலர்கள் முழு நாமக்கல் கவிஞர் மாளிகையையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். இதனால் பாதுகாப்பு கெடுபிடி அதிகமாகும்.
முதல்வரின் தனி பிரிவுக்கு புகார் கொடுக்க வருகிறவர்கள் தலைமை செயலகத்துக்குள் பாதுகாவலரின் அனுமதி பெற்று தற்போது வந்து, புகார் கொடுத்து செல்கிறார்கள். இனி அதுபோன்ற நிலை தொடருமா இல்லை அவர்களை வெளியில் நிறுத்தி காவலர்களே புகாரை பெற்றுக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளை பொதுமக்கள் பார்க்க தலைமை செயலகம் வருவது வழக்கம்.
ஆனால், பாதுகாப்பு கெடுபிடிகளால் இனி அவர்களால் தலைமை செயலகத்துக்குள் வரவே முடியாத நிலை ஏற்படும். முதல்வரின் அலுவலகம் இடம் மாற உள்ளதால், நாமக்கல் கவிஞர் மாளிகையின் பின்பக்கம் செயல்படும் உணவகம், கடைகள் தொடர்ந்து செயல்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று பல்வேறு பிரச்னைகளை அரசு ஊழியர்களும், பொதுமக்களும் சந்திக்கும் ஆபத்து உள்ளது. ஆனாலும், முதல்வர் அலுவலகம் இடம்மாறிய பிறகுதான் உண்மையான கள நிலவரம் தெரியவரும்.
* பல கோடி செலவு செய்து அறைகள் புதுப்பிக்கப்படும்
முதல்வர் மற்றும் அவரது செயலாளர்களின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இதுவரை பணியாற்றிய பல்வேறு துறை அதிகாரிகள் வேறு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இப்படி மாற்றப்படும்போது, புதிய கட்டிடத்தை பயன்படுத்தும் அதிகாரிகளும் பல கோடி ரூபாய் செலவு செய்து தங்கள் அலுவலகத்தை புதுப்பிப்பார்கள். ஏசி, ஷோபா, நாற்காலி, மேஜை உள்ளிட்டவை அனைத்தும் புதிதாக வாங்கப்படும். காரணம், ஏற்கனவே இதற்கு முன் இருந்த அதிகாரிகள் பயன்படுத்திய பொருட்களை புது அதிகாரிகள் பயன்படுத்த மாட்டார்கள். இதுதான் தலைமை செயலகத்தில் காலகாலமாக நடந்து வருகிறது.
அதேபோன்று, கலைவாணர் அரங்கம் சென்றுள்ள அதிகாரிகளும் தங்களது அறையை அழகுபடுத்தும் பணியில் ஈடுபட தொடங்கி விட்டனர். இப்படி, அரசு பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் அரசு கஜானாவில்தான் கை வைக்கப்படும். இப்படியேபோனால், மக்கள் நல திட்டங்கள் எப்படி விரைவாக நடைபெறும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே தவெக ஆட்சி அமைந்த 60 நாட்களில் சில ஐஏஎஸ் அதிகாரிகள் 3 முறைகூட மாற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், முதல்வரின் அலுவலக மாற்றமும் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது.
