சென்னை: தவெக எம்எல்ஏக்கள் மக்கள் பிரதிநிதிகளா அல்லது பேட்டை ரவுடிகளா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தவெக எம்எல்ஏக்கள் மக்கள் பிரதிநிதிகளா அல்லது பேட்டை ரவுடிகளா? ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள திரையரங்கில் ஜனநாயகன் படம் பார்த்து விட்டு வெளியே வந்த, அப்பகுதியின் தவெக எம்எல்ஏ கபிலிடம், திரைப்படத்தின் ரிவ்யூ கேட்க முயன்ற பத்திரிகையாளர்கள் மீது எம்எல்ஏ மற்றும் ஆதரவாளர்கள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது கண்டனத்திற்குரியது.
பத்திரிகையாளர்கள் மீது நடந்த தாக்குதலை படம் பிடித்தவர்களின் செல்போன்களை பிடுங்கி, ஆதாரங்களை அழித்து எம்எல்ஏ கபிலின் ஆதரவாளர்கள் அராஜகம் செய்திருப்பது, ஆணவத்தின் உச்சம். தங்கள் ஆட்சியின் அவலங்களைப் பற்றி பேசுபவர்களின் குரல்வளையை நெரிக்க முயல்வது, ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தால் அதிரடியாக கைது செய்வது, அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக செயல்படும் பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது என, ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தொடர் அராஜகங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது அப்பட்டமான பாசிசப் போக்கு.
ஆட்சி, அதிகார போதையில் ஊறித் திளைத்துக் கொண்டிருக்கும் தனது கட்சிக்காரர்களின் ஆணவத்தை முதல்வர் விஜய் கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் மற்றும் பத்திரிகைகளின் பாதுகாப்பும், கருத்து சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், ‘‘கரூர் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியதை நீதிமன்றம் ரத்து செய்த விவகாரம், முதல்வர் எந்த விசயத்தையும் ஆராய்ந்து பார்க்காமல் எடுக்கும் முடிவின் விளைவாக இது இருக்கிறது” என்றார்.
