மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னையில் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்த பிரதமர் தலையிட வேண்டும்: முதல்வர் விஜய் கடிதம்

 

சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான நதிநீரை ஒழுங்குபடுத்தும் அரசியலமைப்பு சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்த பிரதமர் தலையிட வேண்டும் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார். ஒன்றிய அரசின் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் காவிரி – மேகதாது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலுக்கு, முதல்வர் விஜய், பிரதமர் மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்: காவிரி ஆற்றின் குறுக்கே ஏதேனும் ஒரு கட்டமைப்பை அமைப்பதற்கு முன், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடக அரசு பெற வேண்டும் என்று 16 பிப்ரவரி 2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் தொடர்பாக தற்போது நிலவும் சட்டநிலையையும், ஏற்கனவே நிலைபெற்றுள்ள சட்டக் கோட்பாடுகளையும் உரிய முறையில் கருத்தில் கொள்ளாமல், ஒன்றிய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் இவ்வாறு ஏமாற்றமளிக்கும் பதிலை அளித்துள்ளதாக தோன்றுகிறது. காவிரி நீர்விவகார நடுவர் மன்ற தீர்ப்பை பொறுத்தவரையில், நடுவர் மன்ற தீர்ப்பின் XVIII-ம் பிரிவை உச்சநீதிமன்றம் வெளிப்படையாக உறுதி செய்துள்ளது. அந்த பிரிவு, ஒவ்வொரு மாநிலமும் தனது எல்லைக்குள் நீரை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை, ‘நடுவர் மன்றத்தின் உத்தரவிற்கு முரண்படாத வகையில்’ மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

எனவே, நடுவர் மன்ற தீர்ப்பின் கீழ் நிறுவப்பட்டுள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட நீரோட்ட முறையை பாதிக்கும் சாத்தியம் கொண்ட எந்த திட்டமும், அந்த தீர்ப்புடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதி செய்வதற்காக கட்டாயமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். நடுவர் மன்றமே பல முக்கியமான வழிகாட்டு கோட்பாடுகளை வகுத்துள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பின் XI-ம் பிரிவு, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கிடையே பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டு, ஒழுங்குமுறை ஆணையத்துடன் கலந்தாலோசிக்கப்படாத வரையில், கீழ்ப்படுகை மாநிலங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நீர் வழங்கலை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் மேல்ப்படுகை மாநிலம் மேற்கொள்ளக் கூடாது என்று குறிப்பாக தடை செய்கிறது.

அதேபோல், XX-ம் பிரிவு, நடுவர் மன்ற தீர்ப்பில் ஏதேனும் மாற்றம், திருத்தம் அல்லது மாற்றியமைப்பு செய்யப்பட வேண்டுமெனில், அது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்பந்தத்தின் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும் என்பதை அங்கீகரிக்கிறது. எனவே, முன்மொழியப்பட்டுள்ள மேகதாது திட்டத்தை வெறும் ஒரு பொறியியல் திட்டமாக மட்டும் மதிப்பீடு செய்ய முடியாது என்பது தமிழ்நாட்டின் தெளிவான மற்றும் பரிசீலிக்கப்பட்ட நிலைப்பாடாகும். அதன் சட்டபூர்வத்தன்மை முதலில் பின்வரும் அடிப்படைகளில் ஆய்வு செய்யப்பட வேண்டும்:

* காவிரி நீர்விவகார நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு;

* 16 பிப்ரவரி 2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு;

* கீழ்ப்படுகை மாநிலங்களின் உரிமைகள்; மற்றும் நடுவர் மன்ற தீர்ப்புக்கும் நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களுக்கும் இணங்க திருத்தப்பட வேண்டும் என்பதற்காக, கர்நாடக அரசு 2019ம் ஆண்டு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்தால் திருப்பி அனுப்பப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதுவே, நடுவர் மன்ற தீர்ப்புடன் முழுமையான இணக்கம் காண்பது தவிர்க்க முடியாத முன்நிபந்தனை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.இந்நிலையில், ஒன்றிய அரசு பின்வருவனவற்றை உறுதிசெய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்:

27 ஜூலை 2026 அன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட நட்சத்திர குறியிடப்படாத கேள்வி எண் 876-க்கு, மாநிலங்களுக்கு இடையிலான நீர்விவகாரங்களில் நடைமுறையில் உள்ள சட்டத்தையும், பொருந்தக்கூடிய சட்டக் கோட்பாடுகளையும் குறிப்பிடாமல், ஒன்றிய ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் அளித்த பதில் திரும்பப் பெறப்பட வேண்டும். மேலும், பின்வருவனவும் உறுதிசெய்யப்பட வேண்டும்:

* காவிரி நீர்விவகார நடுவர் மன்ற தீர்ப்புக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் வெளிப்படையாகவும் நிரூபிக்கத்தக்க வகையிலும் இணங்குவதாக உறுதி செய்யப்படாத வரையில், மேகதாது திட்டத்திற்கு எந்தவிதமான சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கப்படக்கூடாது.

* நீரின் அளவு மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நீர் வெளியீட்டு முறை ஆகிய இரண்டிலும் கீழ்ப்படுகை மாநிலங்களின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்.

* எதிர்காலத்தில் இத்திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு பரிசீலனையும், அனைத்து கீழ்ப்படுகை மாநிலங்களின் பாதகங்களையும் கருத்தில் கொண்டு, முழுமையான தொழில்நுட்ப மற்றும் சட்ட ஆய்வுக்கு பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும்.

காவிரி ஆறு ஒரு நீராதாரம் மட்டுமல்ல; தென்னிந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அது உயிர்நாடியாகும். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீரை ஒழுங்குபடுத்தும் அரசியலமைப்பு சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு, நடுவர் மன்ற தீர்ப்பின் முழுமையையும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் பாதுகாப்பது இன்றியமையாததாகும். நீதி, கூட்டாட்சி சுமூகநிலை மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் உண்மையான அமலாக்கம் ஆகியவற்றின் பரந்த நலனைக் கருத்தில் கொண்டு, தங்களது கனிவான தலையீட்டை வேண்டுகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories: