அரியலூர்: அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்காக ‘சிங்கப்பெண்கள் படை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 22ம்தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி கலந்துகொண்டு பேசுகையில், ‘18 வயதுக்குட்பட்ட பெண்களிடம் ஹாய் என குறுஞ்செய்தி அனுப்புவது, அவர்களிடம் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நீங்கள் ஜெயிலுக்கு போவீங்க, அனாவசியமாகவோ அல்லது அருவருக்கத்தக்க வகையில் பேசினாலோ போக்சோ சட்டத்தின் கீழ் சிறைக்கு செல்ல நேரிடும் என மாணவர்களை எச்சரிக்கும் விதமாக பேசினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது. போக்சோ வழக்கை பற்றி தெரியாமல் மாணவர்களுக்கு இப்படியா விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி சிங்கப் பெண்’ அதிரடிப்படையிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் இதற்கு முன்பு பணியாற்றி வந்த அரியலூர் காவல் நிலையத்திற்கே மாற்றப்பட்டார்.
