ஒன்றிய பாஜ அரசின் பங்குடன் காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்காமல் தடுக்க சதி நடக்கிறது: தலைவர்கள் கண்டனம்

 

சென்னை: மேகதாது அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என கூறிய ஒன்றிய அமைச்சருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அன்புமணி (பாமக தலைவர்): மேகதாது அணை விவகாரத்தில் காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் இருப்பதற்காக பெரும் சதி நடக்கிறது. இதில் ஒன்றிய அரசும் பங்குதாரராக உள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.

கிருஷ்ணசாமி (புதிய தமிழகம் கட்சி தலைவர்): தமிழ்நாட்டினுடைய அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமுகமாக தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையில் வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும். எல்லா பிரச்னைகளுக்கும் கடிதம் எழுதிக் கொண்டிருந்தால் போதுமா என்று திமுகவை விஜய் கேட்டார். இப்போது காவிரி பிரச்னைக்கு கடிதம்தான் எழுத ஆரம்பிக்கிறார். கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் சந்திப்பது தவறானது.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்): காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டப்பட்டால், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் பாலைவனமாகிவிடும். 1992ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக ஒன்றிய அமைச்சர் பதவியை வாழப்பாடி ராமமூர்த்தி ராஜினாமா செய்தார். அதேபோன்று, ஒன்றிய இணை அமைச்சர் முருகன், அன்புமணி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்களா?

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றை நீர்த்துப் போக செய்து, கர்நாடக மாநிலம், மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய பாஜ அரசு வஞ்சகமான முறையில் அனுமதி வழங்க முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை என்பதே கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): மேகதாது அணை கட்டினால், தமிழ்நாட்டிற்குரிய தண்ணீர் கிடைக்காமல் பாலைவனமாகும் ஆபத்தை மறுக்க முடியாது. தமிழ்நாட்டின் பாசன உரிமையைப் பாதுகாக்கவும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு சாதகமாக செயல்படும் ஒன்றிய பாஜ அரசின் போக்கைக் கண்டித்தும் வரும் 2ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: