*அதிகாரிகள் பேச்சுவார்த்தை
*புவனகிரி அருகே பரபரப்பு
புவனகிரி : மயானத்திற்கு சாலை வசதி கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்த திரண்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.புவனகிரி அடுத்த கீரப்பாளையம் அருகே பூதங்குடி கிராமத்தில் மயானத்திற்கு சாலை வசதி இன்றி உள்ளது.
இதனால் இப்பகுதி மயானத்திற்கு செல்ல சாலை வசதி கேட்டு கிராம மக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் கீரப்பாளையம் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளதை கண்டித்தும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று கீரப்பாளையம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று அந்த அமைப்பின் மாநில குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கீரப்பாளையம் கடைவீதியில் ஒன்று திரண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப் மற்றும் போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் முடிவில், பூதங்குடி சுடுகாட்டு பாதை தொடர்பாக வரும் 28ம் தேதி சிதம்பரம் சார் ஆட்சியர் தலைமையில் கிராம மக்கள் மற்றும் இடத்தின் உரிமையாளர்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. அதுபோல கீரப்பாளையம் திருப்பணி நத்தம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பூதங்குடி கிராமத்தில் மயானத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு நாங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றோம்.
இதுகுறித்து மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதற்காக போராட்டம் நடத்த வந்தபோது, அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபோல் கீரப்பாளையத்தில் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.
இந்த கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறிவிட்டு சென்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
* மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
* பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
