*போலீசார் பேச்சுவார்த்தை
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த மோவூர் கிராமம் வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் ஜெகநாதனின் மகன் கார்த்திகேயன்(58). இவரது மனைவி பூங்கோதை(42). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கார்த்திகேயன், மோவூர் ரேஷன் கடையில் ஒப்பந்த அடிப்படையில் இரவு காவலராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் ரேஷன் கடையில் மின் விசிறி சுவிட்சை போட்டுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் கார்த்திகேயன் உடல் பிரேத பரிசோதனை முடிந்தநிலையில் அவரது உடலை வாங்க மறுத்து, குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கார்த்திகேயனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் வட்டாட்சியர் பொறுப்பு பிரகாஷ், சேத்தியாத்தோப்பு பொறுப்பு டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் சையத் அப்சல், காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார், இறந்தவர் தரப்பில் வழக்கறிஞர் ராஜா ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், உயிரிழந்த கார்த்திகேயனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்று சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
