*மீனவர்கள், விவசாயிகள் வலியுறுத்தல்
ராமநாதபுரம் : அரியவகை பவளப்பாறைகள், 21 குட்டி தீவுகள் இருக்கும் மன்னார் வளைகுடா கடல் பகுதியை பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மீனவர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் கடற்கரை பகுதி சுமார் 1,076 கி.மீ நீளம் கொண்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 10,500 சதுர கி.மீ பரப்பில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் உள்ளது. இது தனுஷ்கோடி, ராமேஸ்வரம் முதல் சாயல்குடி அருகே தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் வரை விரிந்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் முதன் முறையாக கடந்த 1974ம் ஆண்டு யுனஸ்கோவால் பரிந்துரைக்கப்பட்டு, மத்திய அரசால் கடந்த 1989ம் ஆண்டு உயிர்கோள காப்பகமாக மன்னார் வளைகுடா அறிவிக்கப்பட்டது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, வான்தீவு, காசுவார் தீவு, ஆனையப்பர் தீவு, உப்புத்தண்ணீர் தீவு, புலுவினிசல்லி தீவு, நல்ல தண்ணீர்தீவு, தலையாரி தீவு, வாழை தீவு, வாலிமுனைதீவு, அப்பா தீவு, பூவரசன்பட்டிதீவு, முள்ளிதீவு, முசல்தீவு, மனோலிபுட்டி தீவு, மனோலிதீவு, பூமரிச்சான்தீவு, புள்ளிவாசல்தீவு, குருசடை தீவு, சிங்கில்தீவு ஆகிய 21 குட்டி தீவுகள் உள்ளன. இங்கு பாதுகாப்பு அரணாக அரியவகை பவளப்பறைகள் உள்ளன.
இவை மீன்களின் இருப்பிடமாகவும், இயற்கை பேரிடரின்போது மீனவ கிராமங்களின் பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது. இங்குள்ள கடல்பகுதியில் டால்பின், கடற்பசு, கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை, மீன்கள், கடல் தாவரங்கள், கடல் புற்கள், கடல்பாசி உள்ளிட்ட உலகிலேயே வேறு எங்கும் காண முடியாத 3,600க்கும் மேற்பட்ட அரியவகை உயிரினங்கள் வசிக்கின்றன. இதுதவிர அரியவகை பவளபாறைகள், கழிமுகங்கள், சதுப்பு நில அலையாத்தி காடுகளும் உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளுக்கு அடுத்தப்படியாக, நீண்ட கடற்கரையாக சாயல்குடி அருகே வாலிநோக்கம், மூக்கையூர், வேம்பார் கடற்கரை விளங்குகிறது. இங்குள்ள நிலப்பகுதியில் இருந்து சுமார் 3 முதல் 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் குட்டி தீவுகள் உள்ளன. இதில் நல்ல தண்ணீர் தீவில் மட்டும் சுவையான குடிநீர் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
தீவுகளை சுற்றிலும் ஆழமான கடல் பகுதியாகும். இங்கு டால்பின்கள் குதித்து விளையாடுவது ரம்மியமான காட்சியாகும். இதேபோல கடற்புறா, கொக்கு, பிளம்மிங்கோ உள்ளிட்ட பறவைகள் தீவுகளில் வசிக்கின்றன.
மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தேவிப்பட்டிணம், தொண்டி, ஏர்வாடி, வாலிநோக்கம், மூக்கையூர், ரோச்மாநகர் என சுமார் 180 கடற்கரை பகுதிகளில் 1,900 விசைப்படகுகள், 2,000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் வல்லம் போன்றவை மூலம் மீன்பிடி தொழில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மற்ற கடல்களை காட்டிலும் மன்னார் வளைகுடா கடலில் கிடைக்கும் மீன்கள் தனி சுவை கொண்டது. இதனால் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இக்கடலில் சீலா, இறால், கணவாய் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்கள், வாளை, குமிளா, காரா, மொரல், நகரை, மத்தி, வாவல்திருக்கை, ஊலா, சூடை, பாறை வகை மீன்கள், மயில்மீன் மற்றும் நண்டு வகைகள் அதிகம் கிடைக்கிறது.
இதனால் நாள்தோறும் சுமார் ரூ.5 கோடி வரை மீன் வர்த்தகம் நடக்கிறது. அந்நிய செலவாணி ஈட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுதவிர கடற்பாசி, இறால்மீன் வளர்ப்பு, சங்கு குளித்தல் போன்றவை மூலமும் வருவாய் ஈட்டப்படுகிறது.
மன்னார் வளைகுடா கடல் எல்லை பகுதியில் ஒன்றிய அரசின் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோ கார்பன் இயக்குனரகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொகுதிகளை ஏலம் விட முடிவு செய்தது.
இதன்படி மன்னார் வளைகுடா கடலில் எரிவாயு கிணறுகள் அமைத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.மேலும், கடல்வாழ் உயிரினங்கள், அரியவகை பவளப்பாறைகள் அழியும் என்பதால் கடந்த திமுக அரசு அனுமதி அளிக்கவில்லை.
இதனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், தற்போதைய தவெக அரசின் அனுமதியுடன் மத்திய அரசு எப்போது வேண்டுமானலும் இத்திட்டத்தை செயல்படுத்த முனையலாம். எனவே மன்னார் வளைகுடா கடல் பகுதியை பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக அறிவிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள், விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எரிவாயு கிணறு அமைக்க கூடாது
மீனவர்கள் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 180 கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரமாக மன்னார் வளைகுடா திகழ்கிறது. அந்நிய செலாவணி ஈட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அரியவகை பவளபாறைகள், கடல் உயிரினங்கள் கொண்ட இப்பகுதியில் எரிவாயு கிணறு அமைத்தால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது போல் மன்னார் வளைகுடா கடலை பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக அறிவிக்க வேண்டும்’ என்றனர்.
மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ கூறுகையில், `தமிழ்நாட்டில் விவசாயம், பனைமர தொழில், மீன்பிடி ஆகிய 3 முக்கிய தொழில்கள் ஒருங்கே அமைந்துள்ள ஒரே மாவட்டமாக ராமநாதபுரம் உள்ளது.
மாவட்டத்தில் ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்கோள காப்பகம், சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், சக்கரக்கோட்டை, தேர்த்தங்கல் உள்ளிட்ட பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இங்குள்ள சாதகமான தட்பவெட்ப சூழலால் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் லட்சக்கணக்கில் வந்து செல்கின்றன.
மேலும் அழகன்குளம், ஆற்றங்கரை உட்பட பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், மன்னார் வளைகுடா பகுதியில் இயற்கை எரிவாயு கிணறுகள் அமைத்தால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியை பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்’ என்றார்.
