*மாணவர்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்
கண்ணமங்கலம் : கண்ணமங்கலத்தில் செயல்பட்டு வரும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் பின்புறம் முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு நிலவி வருவதாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
பள்ளி கட்டிடத்தின் பின்புறம் உள்ள குறுகிய பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், காகிதக் குப்பைகள், உலர்ந்த இலைகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் அசுத்தமாக காட்சியளிக்கிறது.
மேலும், மழைக்காலங்களில் அப்பகுதியில் மழைநீர் தேங்கும் அபாயம் இருப்பதால் கொசுக்கள் பெருகி டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் சூழல் உருவாகும்
என்ற அச்சமும் எழுந்துள்ளது.மேலும் குப்பைகள் தேங்கியுள்ள பகுதியில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் புகலிடமாக மாறியுள்ளது.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் தினமும் கல்வி பயிலும் அரசு பள்ளி வளாகத்தில் சுகாதாரமான சூழல் நிலவ வேண்டிய நிலையில், இவ்வாறு குப்பைகள் தேங்கி கிடப்பது கல்வி துறையின் பராமரிப்பு குறைபாட்டை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, பள்ளி வளாகத்தின் பின்புறத்தில் குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி, பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க கல்வித்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
