ஊட்டி: ஊட்டியில் மூடப்பட்டுள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் அத்துமீறி நுழைந்து வெள்ளி துகள்கள் கலந்த 3 டன் மண் கடத்திய தவெக நிர்வாகி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி-கூடலூர் சாலையில் எச்பிஎப் எனப்படும் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. பல்வேறு காரணங்களால் தொழிற்சாலை நஷ்டத்திற்கு தள்ளப்பட்டதால் இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் படிப்படியாக விருப்ப ஓய்வில் சென்றனர். இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு முதல் பயன்பாடின்றி மூடப்பட்டது.
இந்த தொழிற்சாலையில் கச்சா பிலிம் தயாரிக்க தங்கம் மற்றும் வெள்ளி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொழிற்சாலை மூடப்பட்ட நிலையில் அந்த பகுதி வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மண் மற்றும் கட்டிடத்திற்குள் வெள்ளி கிடைக்கும் என கூறப்படுவதால் சமீபகாலமாக அக்கம்பக்கத்தினர் சிலர் தொழிற்சாலை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மண் உள்ளிட்டவற்றை எடுத்து செல்கின்றனர். இவ்வாறு நுழைந்ததாக அண்மையில் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் தொழிற்சாலை வளாகத்தில் சுற்றித்திரிந்துள்ளனர். இது தொடர்பான ரகசிய தகவலின் அடிப்படையில் புதுமந்து போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொழிற்சாலை வளாகத்தில் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் பிடித்தனர்.
பின்னர், அவர்களை புதுமந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் ஊட்டி கணபதி நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ், பிரதீப், நிதிஷ்குமார் என்பது தெரியவந்தது. அவர்கள் வெள்ளி துகள்கள் கிடைப்பதாக கூறி சுமார் 3 டன் மண்ணை இரவோடு, இரவாக கடத்தியுள்ளனர்.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் சுமார் 40க்கும் மேற்பட்ட மண் மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சுரேஷ், பிரதீப், நிதிஷ்குமார் ஆகிய 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் ரவி (எ) சுதாகர், ஹரிஹரன், நந்தகுமார் ஆகிய மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து திருட்டுத்தனமாக மண்ணை கடத்தியதாக புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான சுரேஷ் ஊட்டி 2வது வார்டு தவெக கிளைச் செயலாளர் என்பதும், மற்ற 5 பேரும் தவெக பிரமுகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் தப்பி தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
