இனி பெட்ரோல், டீசல் வேண்டாம் போக்குவரத்து துறையின் எதிர்காலமே ஹைட்ரஜன்தான்: ஒன்றிய அமைச்சர் கட்கரி கருத்து

காந்திநகர்: “போக்குவரத்து துறையின் எதிர்காலமே ஹைட்ரஜனில்தான் உள்ளது” என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் நேற்று நடந்த பிரவாஸ் 5.0 மற்றும் பாரத் பிரவாஸ் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது பேசிய நிதின் கட்கரி, “போக்குவரத்து துறையின் எதிர்காலம் ஹைட்ரஜன்தான் என்பதிலும், அதுவே வருங்காலத்துக்கான எரிபொருள் என்பதிலும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

எனவே அதற்கான பணிகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் 10 வழித்தடங்களில் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துவது தொடர்பான சோதனைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள்கள் ஆகிய துறைகளில் தொழில்துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியா தனது தொழில்நுட்பம் மற்றும் செலவு திறன் ஆகியவை மூலம் உலகளவில் முன்னிலை வகிக்கும்.

பேருந்துகள் தயாரிப்பில் வாகன துறை எடுத்துள்ள முயற்சிகள் மிகவும் முக்கியமானவை. போக்குவரத்து நிறுவனங்களும், உற்பத்தியாளர்களும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்குவது குறித்து சிந்திக்க வேண்டும். நியாயமான விலையில், கூடுதல் வசதிகளை வழங்குவதே உற்பத்தியாளர்களின் பொறுப்பு.

பாதுகாப்பான போக்குவரத்து என்பது மற்றொரு முக்கியமான விஷயமாக உள்ளது. நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் விபத்துகளும், அதில 1.80 லட்சம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த உயிரிழப்புகளில் 66 சதவீதம் பேர் 18 முதல் 36 வயதுக்குள்பட்டவர்கள். அதிகரிக்கும் விபத்துகளால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீத இழப்பு ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுப்பதில் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். சாலை பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு அதிக முன்னுரிமை தருகிறது என்றார்.

Related Stories: