31 பேருக்கு அரசு வேலை வழங்கியதில் பலியான சஞ்சு வர்ஷனின் தந்தை ரகுநாதன் என்பவரும் ஒருவர். இவருக்கு மாவட்ட வருவாய் அலகு பிரிவில் இரவு காவலர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் கலெக்டர் அலுவலக வளாகம் வந்த சஞ்சு வர்ஷனின் தாய், திருவளர்செல்வி, அழுது கொண்டே அளித்த பேட்டியில், ‘‘விஜய் சார் வந்தும் இப்படி நடக்கிறது. சின்னப்பிள்ளையில் இருந்தே அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவர் வந்திருந்தால் பரவாயில்லை, கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். அவரும் வேறு திருமணம் செய்து கொண்டு விட்டார்.
இப்போது, வேலை வாங்குவதற்காக உள்ளே சென்று உட்கார்ந்திருக்கிறார். என் கையெழுத்து இல்லாமல் எப்படி வேலை கொடுக்க முடியும். நான் வேலை கேட்டதற்கு ப்ராபரா எல்லாம் வேண்டும் என்றனர். இப்ப எப்படி அவரை உட்கார வைத்திருப்பார்கள். அவர் வேறு திருமணம் செய்துள்ளார். ஒரு பொண்ணு உள்ளது. எல்லாமே ப்ராப்பரா செய்கிறவர்கள் இப்ப எதுக்கு அவரை உட்கார வைக்கனும்.
என்னை கூப்பிட்டு ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா- நான் நாயாட்டம் வெளியே நிற்கிறேன். என்னை ஒரு பொருட்டாகவே யாரும் மதிக்கவில்லை. என்னை விட்டு 10 ஆண்டுகள் பிரிந்திருக்கும் அவர் உள்ளே இருக்கிறார். நான் வெளியே நிற்கிறேன். விஜய் சார் வந்ததுக்கு அப்புறமும் இப்படி நடக்கலாமா? கரூரில் நடந்த விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு என் தங்கச்சிதான் பையனை கூட்டிட்டு போனாங்க, அப்ப ஏற்பட்ட நெருக்கடில இறந்துட்டான்.
பணம் கொடுக்கும் போது இந்த பிரச்னை ஏற்பட்டது. ஆனால், அம்மாவுக்குத்தான் பணம் கொடுக்கனும் என எனக்கு தந்தனர். இந்த பிரச்னைக்கு எனக்கு போன் பண்ண வேண்டாமா? சின்ன பிள்ளையில் இருந்து வளர்த்த என்னை வெளியே விட்டு விட்டு, அவரை உள்ளே அழைத்து உட்கார வைத்துள்ளார்கள். இது என்ன நியாயம். இதை எங்க போய் சொல்வது, செத்து போய் விடட்டுமா? என அழுது புலம்பியது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
